ஏரியில் ஒரு ஓடம்...ஓடம்... காதலுக்கு இது முதல் மரியாதை செய்த படம்...!

by sankaran v |   ( Updated:2023-01-31 05:15:39  )
Muthal Mariyathai
X

காதலுக்குக் கண்ணு மூக்கு இல்லேன்னு கிராமத்துல சொல்வாங்க. சாதி மதம் பாராமல் வருவது தான் உண்மையான காதல். அப்படிப்பட்ட காதல் தான் ஜெயிக்கவும் செய்யும். அந்த வரிசையில் சாதி மதம் மட்டுமல்லாமல் வயதுக்கும் அப்பாற்பட்டு ஒரு காதல் வருகிறது.

அது என்னென்னவெல்லாம் செய்கிறது என்பது தான் இந்தப்படம். முதலில் இதற்குத் தான் மரியாதைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தப்படத்தின் தலைப்பையே முதல் மரியாதை என்று வைத்துள்ளார்கள். இதைப் பற்றிப் பார்க்கலாமா...

கிராமத்துக்கே உரிய மண்வாசனையுடன் கமகமவென்று கமழ்ந்து வந்துள்ளது பாரதிராஜாவின் பக்குவமான படையலாய் முதல் மரியாதை. இந்தப்படத்தின் கதை இதுதான்.

கிராமத்து மண்ணோடும், மனிதப்பண்புகளோடும் வாழும் 50வயதைக் கடந்த ஒரு மனிதர் தான் இந்தக்கதையின் நாயகன். ஊரே அவரைப் பார்த்து மதிக்கிறது. தலைவணங்குகிறது.

இன்னொருவனுக்குக் கர்ப்பமான ஒரு பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவர் மணந்து கொண்டு அவளுக்கு வாழ்க்கைக் கொடுக்கிறார். ஆனால் அவன் மனைவியோ இவரை மதிப்பதே இல்லை.

அவளுக்குப் பிறந்த மகளைத் தன் மகளாகப் பாவித்து வளர்க்கிறார். அவர் தன் வாழ்க்கையை நரகவேதனையாக அனுபவித்து தன் மனக்குறையை எவரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இந்தநிலையில் அவரது வாழ்க்கையில் படகோட்டும் கீழ்ஜாதிப் பெண் ஒருவள் வசந்தமாக வருகிறாள். அவளுடைய கனிவான, அன்பான பேச்சு இவருக்கு மன ஆறுதலைத் தருகிறது.

இருவரும் நட்புணர்வுடன் நெருங்கிப் பழகுகின்றனர். ஊரார் இதைப் பார்த்து இருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுகின்றனர். அவர் மனைவியும் அப்படித்தான் சொல்கிறாள்.

Muthal Mariyathai 2

ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவள் மீது கொண்டது காதலா, பாசமா, அன்பா என்று அவரால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஒரு தடவை ஆமாய்யா அவளை நான் வச்சிருக்கேன்...போதுமா என தன் உறவுக்காரர்கள் முன்னிலையிலேயே வெறுப்பாகச் சொல்லி விடுகிறார்.

ஆனால், இளம் வயது ஓடக்காரப் பெண் அவர் மீது உயிரையே வைத்திருக்கிறாள். அது காதல் தான் என்பதை அவளும் உணர்கிறாள்.

இதற்கிடையே அவள் ஒரு கொலையைச் செய்தவள் எனக்கூறி போலீஸ் அவளைக் கைது செய்து அழைத்துச் செல்கிறது.

பெரியவரின் குடும்ப மானத்தைக் காப்பதற்காகத் தான் அவள் கொலைகாரி ஆனாள் என்பது தெரியவருகிறது. பெரியவரின் மனைவி கர்ப்பத்திற்குக் காரணமானவன் நீண்ட வருடம் ஜெயில் தண்டனையை முடித்துவிட்டு இளம்பெண்ணின் ஓடத்தில் வருகிறான்.

அவளைப் பற்றியும், தனக்குப் பிறந்த குழந்தைப் பற்றியும் கேட்கிறான். இவனை ஊருக்குள் விட்டால் அது பெரியவருக்கும், அவர் குடும்பத்திற்கும் அவமானம் என நினைக்கிறாள் ஓடக்காரி.

MM

அதனால் துடுப்புக்கட்டையால் அவனை அடித்துக் கொல்கிறாள். சிறை தண்டனையை அனுபவிக்கிறாள். தன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற கொலைகாரியான இளம்பெண் பெரியவரின் மனதில் உயர்ந்து நிற்கிறாள்.

தன் கடைசி காலத்தில் அவள் வாழ்ந்த அந்தக் குடிசையிலேயே காலத்தைக் கழிக்கிறார் பெரியவர். நாளடைவில் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அவரைப் பார்க்க பரோலில் வருகிறாள் ஓடக்காரி. அவள் மடியிலேயே அவர் உயிர் பிரிகிறது.

1985ல் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிரம்மாண்ட கலைப்படைப்பு. அந்தக்கால இளசுகள் முதல் பெருசுகள் வரை இந்தப்படத்தின் பாடல்களையும், வசனங்களையும் தவம் கிடந்து கேட்பார்கள். அப்படி ஒரு ஆனந்த அனுபவம் இதுல இருக்கும். சிவாஜி, ராதா, சத்யராஜ், வடிவுக்கரசி, தீபன், ஜனகராஜ், ரஞ்சனின்னு பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ராதாவுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் ராதிகா. மலைச்சாமியாக வந்து சிவாஜி மலை போல மனதில் குடியேறி விட்டார். பொன்னாத்தாளாக வரும் வடிவுக்கரசி நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்து விட்டார்.

இளையராஜாவின் இசை படத்திற்கு உயிர் நாதம். பாடல்களோ தேனாறு. அந்த நிலாவத்தான், பூங்காற்ற திரும்புமா, வெட்டி வேரு வாசம், ஏ குருவி, ராசாவே ஒன்ன நம்பி, ஏ கிளியிருக்கு, ஏறாத மலை மேல, நான் தானே அந்தக்குயில் ஆகிய முத்தான பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

Next Story