வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்... இரண்டு முறை ரிலீஸ் செய்யப்பட்டும் கல்லா கட்டிய ருசிகரம்...

by Akhilan |
வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்... இரண்டு முறை ரிலீஸ் செய்யப்பட்டும் கல்லா கட்டிய ருசிகரம்...
X

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக வரிவிலக்கு பெற்ற படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளை வெள்ளித் திரையில் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜிதான். இதனால்தான், 1960-ல் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி படம் எடுக்க இயக்குநர் பி.ஆர்.பந்துலு எண்ணியபோது அவரின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகத்தான் இருந்தது.

ஆனால், அவரை பெரிய திரையில் தன்னால் கொண்டுவந்து நிறுத்த முடியுமா என்கிற சந்தேகம் சிவாஜிக்கு முதலில் இருந்திருக்கிறது. இதனால், ஆரம்பத்தில் வாய்ப்பு வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். ஆனால், பி.ஆர்.பந்துலு பிடிவாதமாக நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுப் பிறகு நம்பிக்கை பிறக்கவே சிவாஜி அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சித்ரா கிருஷ்ணசுவாமி திரைக்கதை எழுத, டி.எஸ்.சுந்தரம் வசனம் எழுதினார். அப்போது தமிழகத்தில் தி.மு.க ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.

சிவாஜியோ காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும் விதத்திலேயே கப்பலோட்டிய தமிழன் எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து 1960 நவம்பர் 7-ம் தேதி தீபாவளியை ஒட்டி படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் படம் பெறவில்லை. பி.ஆர்.பந்துலுவுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அதன்பிறகு, தமிழகத்தில் நடந்த தேர்தலில் அண்ணா தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றியைப் பிடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. தி.மு.க பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கப்பலோட்டிய தமிழன் படம் மீண்டும் வெளியிடப்பட்டது. முதல்முறை வெளியிடப்பட்டபோது ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இரண்டாவது முறையாகப் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இந்த முறை படத்துக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டது. இதுவே, இந்தியா சுதந்திரமடைந்தபிறகு வரிவிலக்குக் கொடுக்கப்பட்ட முதல் படம். இந்த முறை முந்தைய முறையை விட தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது கப்பலோட்டிய தமிழன் படம்.

Next Story