தமிழில் பாடல்களே இல்லாமல் ஹாலிவுட் பாணியில் வெளிவந்த முதல் படம் இதுதான்…
1918 ஆம் ஆண்டு வெளியான “கீச்சக வதம்” என்ற திரைப்படம் தான் தமிழில் வெளியான முதல் வசனமில்லாத திரைப்படம் ஆகும். அதன் பின் தமிழில் முதல் பேசும் படமாக வெளிவந்தது “காளிதாஸ்”. இத்திரைப்படம் 1931 ஆம் ஆண்டு வெளிவந்தது.
“காளிதாஸ்” திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல கிளாசிக் திரைப்படங்கள் வெளிவந்தன. எனினும் அத்திரைப்படங்களில் 20க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக நடிகர் நடிகைகளே பாடி நடிப்பர். சில காலங்களுக்குப் பின் தான் பின்னணி பாடகர் என்ற கான்செப்ட்டே அறிமுகமானது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமா கதையம்சத்தில் பல நவீன மாற்றங்கள் நிகழ்ந்தன. வெளிநாட்டுத் திரைப்படங்களின் தாக்கம் நம்மூர் சினிமாக்களிலும் தென்பட்டது.
அப்படிப்பட்ட நவீன திரைப்படங்களுக்கிடையே நவீன திரில்லர் வகையராக்களுக்கு முதல் விதை போட்ட திரைப்படம் தான் “அந்த நாள்”. 1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரி பாய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை எஸ். பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இவர் வீணை வித்வான் என்பதால் இவரை வீணை பாலச்சந்தர் எனவும் அழைப்பார்கள்.
ஜப்பானிய சினிமாவின் பிரபல இயக்குனர் அகிரா குரோசோவா இயக்கிய “ராஷோமான்” என்ற திரைப்படத்தை ஒரு உலக சினிமா விழாவில் பார்த்து அசந்துபோன பாலச்சந்தர், இத்திரைப்படத்தை போலவே தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என முடிவு செய்தார்.
ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையை இந்த கதாப்பாத்திரம் தான் செய்தது என நேரடியாக கூறாமல் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் மீதும் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்படியாக திரைக்கதை அமைத்து படத்தின் கிளைமேக்ஸில் யார் கொலை செய்தார் என்பதை வெளிப்படுத்துவது தான் ராஷோமான் திரைப்படத்தின் மையக்கதை.
இதனை கொண்டு இதே பாணியில் “அந்த நாள்” திரைப்படத்தை இயக்கியிப்பார் வீணை பாலச்சந்தர். குறிப்பாக வெளிநாட்டுத் திரைப்படங்களை போலவே எந்த பாடல்களும் இல்லாமல் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருப்பார்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல பாடல்களை கொண்ட திரைப்படங்கள் வெளிவந்த சமயத்தில் புதிதாக டிராக் அமைத்து சினிமா என்னும் தொடர்வண்டியை வேறு பக்கத்திற்குத் திருப்பிய பெருமை வீணை பாலச்சந்தரையே சாரும்.