தமிழில் ஆஸ்கருக்குச் சென்ற முதல் படம் இதுதான்… அப்பவே அப்படி!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.. ஆனால் ‘ஜெய் பீம்” திரைப்படம் ஆஸ்கர் விருது கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமாவில் “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு முன்பு பல திரைப்படங்கள் ஆஸ்கருக்குச் சென்றுள்ளது. இதில் மணிரத்னம் இயக்கிய “நாயகன்” (1987), “அஞ்சலி” (1990) போன்ற திரைப்படங்களை கூறலாம். மேலும் கமல்ஹாசன் கதையம்சத்தில் அமைந்த “தேவர் மகன்” (1992), ஷங்கர் இயக்கிய “இந்தியன்” (1996), “ஜீன்ஸ்” (1998) ஆகிய திரைப்படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டன.
அதே போல் கமல்ஹாசன் நடித்த “குருதிப்புனல்” (1995), கமல்ஹாசன் இயக்கி நடித்த “ஹே ராம்” (2000) ஆகிய திரைப்படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டன. வெற்றிமாறன் இயக்கிய “விசாரணை” (2015) திரைப்படம் கூட ஆஸ்கர் விருதுக்குச் சென்றது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் எது தெரியுமா?
1969 ஆம் ஆண்டு சிவாஜி மூன்று வேடங்களில் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் “தெய்வ மகன்”. இத்திரைப்படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். சாந்தி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக பெரியண்ணா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
“தெய்வ மகன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் சிறப்பான நடிப்பை பலரும் பாராட்டினர். இந்த நிலையில்தான் 1970 ஆம் ஆண்டு நடந்த 42 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு “தெய்வ மகன்” திரைப்படம் அனுப்பப்பட்டது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் திரைப்படமாக “தெய்வ மகன்” அமைந்துள்ளது.