ஆகஸ்டு 15ஐ குறி வைக்கும் 5 படங்கள்!.. விக்ரமுக்கு ஒரு ஹிட் கிடைக்குமா?!...

Thangalan
திரையுலகை பொறுத்தவரை முக்கிய பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். அதுவும் பண்டிகை நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அடுத்த சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வரும். எனவே, தியேட்டருக்கு மக்கள் வருவார்கள். வசூலை அள்ளிவிடலாம் என்பதுதான் வியாபார கணக்கு.
ஒருபக்கம், நடிகர்களும் தங்களின் படங்கள் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற நாட்களில் ரிலீஸ் ஆவதையே விரும்புவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் போன்ற நடிகர்களின் பல படங்கள் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகி வசூலை பெற்றிருக்கிறது.
ஆனால், கடந்த 10 வருடங்களாக அப்படி வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ரஜினி, விஜய், போன்ற நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறார்கள். இப்போது ரஜினி, அஜித் போன்றவர்கள் அடுத்தடுத்து படங்களை புக் செய்து வேகம் காட்டி வருகிறார்கள்.
வருகிற ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் வெளியாவதாக இருந்தது. எனவே, சில தமிழ் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது புஷ்பா 2 படம் டிசம்பருக்கு தள்ளி போய்விட்டது. எனவே, 5 தமிழ் படங்கள் ஆகஸ்டு 15ம் தேதியை குறி வைத்திருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள தங்கலான், பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள வணங்கான், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன், ஜெயம் ரவி நடித்திருக்கும் காதலிக்க நேரமில்லை மற்றும் இயக்குனர் நெல்சனின் தயாரிப்பில் கவின் நடித்திருக்கும் பிளடி பெக்கர் ஆகிய படங்களையும் ஆகஸ்டு 15ம் தேதிக்கு களமிறக்க படக்குழு திட்டமிட்டு வருகிறார்களாம்.
அதேநேரம், இத்தனை படங்களும் ஆகஸ்டு 15ம் தேதிக்கு வெளியாகுமா இல்லை இதில் சில படங்கள் மட்டுமே வெளியாகுமா என்பதெல்லாம் அன்றுதான் தெரியவரும்.