நடிகைகளை கடத்த வந்த கும்பல்!.. இறங்கி அடித்து ஓடவிட்ட எம்.ஜி.ஆர்!. நடிகை பகிர்ந்த சம்பவம்!..

by சிவா |
நடிகைகளை கடத்த வந்த கும்பல்!.. இறங்கி அடித்து ஓடவிட்ட எம்.ஜி.ஆர்!. நடிகை பகிர்ந்த சம்பவம்!..
X

MGR: திரைப்படங்களில் ஹீரோக்கள் எப்போதும் கெட்டவர்களை அடித்து துவம்சம் செய்வது போலவே காட்டுவார்கள். ஏனெனில், அப்போதுதான் ரசிகர்களின் மனதில் அவர் ஹீரோவாக தெரிவார். ஹீரோ என்றால் தவறுகளை தட்டி கேட்க வேண்டும், பெண்களிடம் வம்பிழுப்பவர்களை அடித்து விரட்ட வேண்டும் என்பது காலம் காலமாக சினிமாவில் காட்டப்பட்டு வருகிறது.

அதேநேரம், அப்படி சினிமாவில் காட்டப்படுவது நிஜ சண்டை இல்லை. ஸ்டண்ட் நடிகர்களை வைத்து ஹீரோவிடம் அவர்கள் அடிவாங்குவது போல எடுப்பார்கள். சினிமாவில் 50 அடியாட்களை துவம்சம் செய்வார் ஹீரோ. ஆனால், நிஜத்தில் அது சாத்தியமில்லை. சினிமா படப்பிடிப்பு வெளிப்புற பகுதிகளில் நடக்கும்போது அந்த படத்தில் நடிக்கும் நடிகைகள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வருபவர்களில் சிலர் நடிகைகளை கிண்டலடிப்பார்கள். சிலர் தொட்டுப்பேசவும் முயற்சி செய்வார்கள். சிலர் அசிங்கமாக பேசி சீண்டுவார்கள். அவர்களை எல்லாம் சமாளித்துதான் ஷூட்டிங்கை நடத்துவார்கள். அதனால்தான் இப்போதெல்லாம் நடிகைகளை சுற்றி பவுன்சர்கள் நிற்கிறார்கள்.

சில நடிகர்கள் மட்டுமே நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருப்பார்கள். விஜயகாந்த் நடிக்கும் படங்களில் யாரேனும் நடிகைகளை சீண்டினால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பார். விஜயகாந்த ஷூட்டிங்கில் இருந்தால் அந்த படத்தில் நடிக்கும் பெண்கள் பாதுகாப்பாகவே உணர்வார்கள்.

விஜயகாந்துக்கு முன்பு அப்படி நடிகைகளுக்கு பாதுகாப்பாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இவரின் படப்பிடிப்பில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே அதை விசாரித்து தீர்த்து வைப்பார். இந்நிலையில்தான் படப்பிடிப்பு தளத்தில் எம்.ஜி.ஆர் போட்ட ஒரு நிஜ சண்டை பற்றி நடிகை லட்சுமி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்.

மாட்டுக்கார வேலன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்கள் இருப்பதை தெரிந்துகொண்டு எங்களை கடத்த ஒரு கும்பல் வந்தது. எம்.ஜி.ஆர் எங்களையெல்லாம் அங்கிருந்து அனுப்பிவிட்டு அவர்களுடன் சண்டை போட்டார். ஸ்பாட்டில் இருந்த ஃபைட்டர்களும் அவரோடு சேர்ந்து வந்தவர்களை அடித்து விரட்டினார்கள். எம்.ஜி.ஆர் ஒரு ரியல் ஃபைட்டர் என்பதை அப்போதுதான் பார்த்தேன். அவர்களை அடித்துவிரட்டிவிட்டு அதன்பின் படப்பிடிப்பை எம்.ஜி.ஆர் நடத்தினார்’ என லட்சுமி கூறியிருக்கிறார்.

Next Story