அந்தப் பாட்டுக்கு பாடகரை தேடி ஜெயிலுக்கே போன தேவா.. பின்னாளில் யார் பாடி ஹிட்டாச்சு தெரியுமா?

தேவா: தேனிசைத் தென்றல் தேவா. இதைவிட கானா இசையை தமிழ் சினிமாவில் பலரும் அறியும் படி செய்த தேவா என்று சொல்லலாம். அதுவரை மெல்லிசை பாடல், ரொமான்டிக் பாடல் குத்து பாடல் இதையே கேட்டு வந்த மக்களுக்கு 90களின் தொடக்கத்தில் ஒரு புதுவிதமான இசையை கேட்டதும் மக்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. இது என்னடா கானா பாடல் என ஆரம்பத்தில் ஒரு வியப்பு இருந்தாலும் அதை கேட்க கேட்க மக்களே ரசித்துப் பாடும் அளவுக்கு அந்த பாடல் உருவாகி இவருடைய இசை பட்டி தொட்டி எங்கும் பரவியது.
கச்சேரியில் பிஸி: 80களின் இறுதியில் அறிமுகமாகி 2000 களின் தொடக்கத்தில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. ஆனால் இப்போது தேவா அந்த அளவு சினிமாவில் பரபரப்பாக இல்லை. அதைவிட கச்சேரிகளில் பிஸியாக இருக்கிறார். வெளிநாடுகளில் எல்லாம் கச்சேரியை நடத்தி தன்னுடைய இசையை வெளிநாட்டிலும் பரவ செய்து வருகிறார் தேனிசை தென்றல் தேவா.
பெரும் பேசு பொருளாக மாறிய விஷயம்: சமீபத்தில் கூட இவர் ஒரு நேர்காணலில் பேசியது பெரும் பேசு பொருளாக மாறியது. அதாவது எனக்கு காபி ரைட் பணமெல்லாம் வேண்டாம். நான் காபி ரைட் கேட்காததால்தான் என் பாடல்களை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அது இளைஞர்களிடம் சென்று சேருகிறது. கருகரு கருப்பாயி பாடல் எல்லாம் இப்போது இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை கேட்டு நான் தான் இசையமைப்பாளர் என தெரிகிறது .
நோ காபி ரைட்: அதனால் எனக்கு என்னுடைய பாடலை பயன்படுத்துவதில் எந்த ஒரு எதிர் கருத்தும் இல்லை என்று கூறியிருந்தார். இது அவருடைய பெருந்தன்மையை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் பிரபு தேவா நடித்து வெளியான இந்து படத்தில் வா முனிமா வா முனிமா என்ற ஒரு பாடல் மிகவும் பிரபலமான பாடல். அந்த பாடலை பாடுவதற்கு முதலில் அந்த காலத்தில் பழனியப்பன் என்ற ஒரு கானா பாடகர் இருந்தாராம்.
சென்னை பாஷையில் பாடல்களை பொளந்து கட்ட கூடியவராம் அந்த பழனியப்பன். அவரைத் தேடும் போது அவர் கொலை குற்றவாளி என கருதி ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார். தூக்கு தண்டனையும் உறுதியாகிவிட்டது .இருந்தாலும் அவர்தான் இந்த பாடலை பாட வேண்டும் என ஜெயிலுக்கே போய்விட்டாராம் தேவா. அப்போது அங்கு இருந்த ஜெயிலர் இவர் ஒரு தூக்கு தண்டனை கைதி.
பாடும் போது அவர் அங்கிருந்து தப்பிவிட்டால் உங்களை தான் பிடிப்பார்கள். நீங்கள் தான் அதற்கு பொறுப்பு என்றெல்லாம் கூறி பாடும்போது கையில் விலங்குகளை எல்லாம் மாட்டி பாட வையுங்கள் என சொல்லி இருக்கிறார். ஆனால் தேவாவிற்கு ஒரு கலைஞனை விலங்கு மாட்டி பாட வைப்பதில் இஷ்டமில்லை. அதனால் வேண்டாம் என சொல்லிவிட்டு அந்த பாடல் பிறகு மனோ பாடி பெரிய ஹிட்டான பாடலாக மாறியது.