1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூர்யவம்சம். இந்தப் படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ராதிகாவும் மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தேவயாணியும் நடித்திருந்தனர். ஆனந்த்ராஜ் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மணிவண்ணன் மற்றும் ஆர் சுந்தராஜன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக சூர்யவம்சம் திரைப்படம் அமைந்தது. 200 நாள்களை தாண்டி படம் வெற்றிப்படமாக ஓடியது. இன்று வரை தொலைக்காட்சியில் சூர்யவம்சம் படத்தை போட்டாலும் அதை பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அதுவும் ரோஜாப்பூ பாடல் இந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடலாகும்.
இந்த நிலையில் சூர்யவம்சம் படத்தில் நடந்த ஒரு விபத்து பற்றி விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுவரை எங்கேயும் சொன்னதில்லை என்றும் தெரிவித்திருந்தார். ரோஜாப்பூ பாடல் படமாக்கியது உடுமலைப்பேட்டையில் அமைந்த ஒரு மலை அடிவாரத்திலாம். அங்கு பஸ் ஸ்டாண்ட் மாதிரி 6 பேருந்துகளை நிறுத்தி செட் போட்டு அந்த பாடலை படமாக்கியிருக்கிறார்கள்.
அப்போது ஒரு பேருந்தின் டிரைவர் பேருந்தை நியூட்ரலில் போட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டாராம். கேமிரா மற்றும் விக்ரமன் உட்பட பல டெக்னீசியன்கள் அங்கு இருக்க திடீரென பேருந்து நகர தொடங்கியதாம். இதை யாரும் எதிர்பார்க்கவில்லையாம். வேகமாக பேருந்து வர பேருந்தின் அடியில் கேமிரா எல்லாம் சிக்கிவிட்டதாம். நல்ல வேளையாக நான் நூலிழையில் உயிர் தப்பினேன் என விக்ரமன் அந்த பேட்டியில் கூறினார்.
சூர்யவம்சம் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் திரைப்படம் என்றே சொல்லலாம். சூர்யவம்சத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியிலும் சரத்குமார் உட்பட சம்பந்தப்பட்ட படக்குழு ஆர்வமாக இருக்கிறார்கள். இருந்தாலும் காலத்தால் அழியாத காவியமாக இருக்கும் சூர்யவம்சம் படத்தை மீண்டும் தொடாமல் இருப்பதுதான் நல்லது.
