கவுண்டமணி எடுத்த தவறான முடிவு!.. விட்ட இடத்தை பிடிக்க போராடிய நக்கல் மன்னன்!...

Goundamani: 60களில் வெளிவந்த சில கருப்பு வெள்ளை படங்களிலேயே ஒரு காட்சியில் நடித்தவர்தான் கவுண்டமணி. கோவையை சொந்த மாவட்டமாக கொண்ட கவுண்டமணி சிறு வயது முதலே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது தமிழகமெங்கும் நாடக கம்பெனிகள் நிறைய இருந்தது. அதில், கோவையை சேர்ந்த ஒரு நாடக குரூப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். இளமை பருவமெல்லாம் நாடகத்தில் கழிந்தது.
நாடக அனுபவம்: பல வருடங்கள் அந்த நாடக கம்பெனியில் நடித்து வந்தார். அப்போதே அவருக்கு செந்திலும் பழக்கமானார். தான் நடிக்கும் நாடகங்களில் செந்திலையும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் சென்னை வந்து பாக்கியராஜ் தங்கியிருந்த அறையில் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடியிருக்கிறார். பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் சேர்ந்த பின்னர் பதினாறு வயதினிலே படத்தில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.
கிழக்கே போகும் ரயில்: அடுத்து எடுத்த கிழக்கே போகும் ரயில் படத்திலும் கவுண்டமணிக்கு முக்கிய வேஷத்தை வாங்கி கொடுத்தார் பாக்கியராஜ். அதன்பின் பல படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். அதோடு, தன்னோடு செந்திலையும் சேர்த்துக்கொண்டு காமெடி காட்சிகளில் கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
கவுண்டமணியின் தவறான முடிவு: வாழ்க்கை நன்றாக போய்கொண்டிருந்தபோதே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற தவறான முடிவை எடுத்தார் கவுண்டமணி. இதுதான் அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டு அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. ரம்யா கிருஷ்ணனுக்கெல்லாம் ஜோடியாக நடித்தார். ஒன்றும் தேறவில்லை.
அதன்பின்னரும் காமெடி வேஷங்கள் வந்தால் ‘நடித்தால் ஹீரோ’ என சொல்லி வந்தார். இதனால் சில வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இந்த இடைவெளியில்தான் எஸ்.எஸ்.சந்திரன் புகுந்தார். அவர் கையில் ஏராளமான படங்கள். தொடர்ந்து பல படங்களிலும் காமெடியனாக நடித்தார். கவுண்டமணிக்கு ஜோடி போட்டு நடித்த கோவை சரளா எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார்.
மார்க்கெட்டை பிடித்த கவுண்டமணி: ஒருகட்டத்தில் ‘இப்படியே போனால் நாம காலி’ என்பதை புரிந்துகொண்ட கவுண்டமணி மீண்டும் காமெடியனாக களம் இறங்கினார். விட்ட இடத்தை பிடிக்க அவர் போராட வேண்டியிருந்தது. அப்போதுதான் கரகாட்டக்காரன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் கவுண்டமணிக்கு ஏறுமுகம்தான். ஹீரோக்களுக்கு இணையான வேடம், அவருக்கு ஒரு காதலி, படத்தில் பாட்டு மற்றும் ஃபைட் சீன்கள், ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் சம்பளம் என அவர் உச்சம் தொட்டார். கவுண்டமணி, செந்தில் இருந்தால்தான் படத்தை வாங்குவோம் என வினியோகஸ்தர்கள் சொல்லும் நிலமையே 90களில் இருந்தது. அதுதான் கவுண்டமணியின் வெற்றியும் கூட.