எட்டு வயதில் வந்த காதல்!.. அதற்கு 20 வயதில் இளையராஜா போட்ட செம டியூன்!.. செம பிளாஷ்பேக்!..

Ilayaraja: இசை என்பது புதிதாக உருவாக்கப்படுவதில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் நான் உருவாக்குகிறேன். அப்படி நான் உருவாக்கிய பின் அந்த பாடல் எனக்கு சொந்தமில்லை. அதை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுடையது என சொன்னார் இளையராஜா. ஆழமாக யோசித்தால் அவர் சொன்னதில் உள்ள உண்மை புரியும்.
அதேபோல், பல பாடல்கள் வேறு ஒருவரின் இசையில் உருவான பாடலின் பாதிப்பிலிருந்து உருவாகியிருக்கிறது. இளையராஜவே பல ஹிந்தி பாடல்களின் பாதிப்பிலிருந்து பல தமிழ் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். ஆனால், அவையெல்லாம் காப்பி அல்ல. அந்த பாடல் கொடுத்த அதே உணர்வை தனது பாடல்களில் கொண்டு வந்தார். அதில் பல பாடல்கள் இயக்குனர்களாலும், நடிகர்களாலும் கேட்டு பெற்றவை.
மேலும், இளையராஜா ஏற்கனவே போட்ட ஒரு பாடலை சொல்லி அது போலவே ஒரு பாடல் வேண்டும் என சில இயக்குனர்கள் கேட்பார்கள். அப்படியும் பல பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறார். இதுபற்றி இளையராஜவே பல இசை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்.
அபூர்வ சகோதரர்கள்: கமல் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் வரும் சூழ்நிலையை சொல்லி எனக்கு எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ படத்தில் வரும் ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ பாடல் போல வேண்டும் என கமல் கேட்டார். அப்படி இளையராஜா போட்ட பாடல்தான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடல். இது போல பல நூறு உதாரணங்களை சொல்ல முடியும்.
லைலா மஜ்னு: இந்நிலையில், ஒரு இசை நிகழ்ச்சியில் ‘உங்களுக்கு எந்த வயதில் இசை மீது காதல் வந்தது?’ என பின்னணிப் பாடகர் மனோ கேட்டார். அதற்கு பதில் சொன்ன இளையராஜா ‘நான் மூன்றாம் வகுப்பு படித்துகொண்டிருந்தபோது என் அண்ணன் ஒரு தியேட்டரில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த தியேட்டருக்கு படம் பார்க்க போவேன். அப்படி நான் பார்த்த படம்தான் லைலா மஜ்னு.
இந்த படத்திற்கு சி.ஆர்.சுப்புராமன் இசையமைத்திருந்தார். அந்த படத்திற்கு அவர் இசையமைத்திருந்த பாடல்கள்தான் எனக்கு இசையின் மீது காதலை ஏற்படுத்தியது. அந்த இசை என் நாடி, நரம்பு எல்லாம் பரவியிருந்தது. பின்னாளில் எனக்கு 20 வயதான போது ‘நாம் இசையமைப்பாளர் ஆனால் லைலா மஜ்னு காதலுக்கு என்ன பாடல் கம்போஸ் செய்வோம் என யோசித்து அப்போதே நான் போட்ட டியூன்தான் ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே’ என சொல்லி இருக்கிறார். பின்னாளில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த அகல் விளக்கு படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது.