பாரதிராஜா இல்லாம நான் இல்ல!.. திரைப்பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இளையராஜா!...

Ilayaraja: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உச்சம் தொட்டவர் இளையராஜா. தனது இனிமையான, மனதை வருடம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானார்.
இசையில் இருந்த ஆன்மா: இளையராஜா கொடுத்த கிராமத்திய இசையில் இருந்த ஆன்மா ரசிகர்களை சுண்டி இழுத்தது. அன்னக்கிளி படத்தில் அவர் போட்ட ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ பாடல் அப்போது ரேடியோவில் ஒளிபரப்பாகும் போது வரிசையாக எல்லார் வீட்டிலும் ரேடியோவை ஆன் செய்து கேட்டிருக்கிறார்கள். இதை இளையராஜாவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
மதுரை பண்ணைபுரத்தை சேர்ந்த இளையராஜாவுக்கு சிறுவயது முதலே இசையில் அதிக ஆர்வம் உண்டு. சின்ன வயதிலேயே ஹார்மோனியும் உள்ளிட்ட சில இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். அண்ணன் பாஸ்கர் நடத்தும் இசைக்கச்சேரிகளில் சொந்தமாக பாடலை கம்போஸ் செய்தும் பாடியிருக்கிறார்.
பாரதிராஜாவின் உதவி: அதன்பின் சென்னை வந்து பாரதிராஜாவின் அறையில் தங்கினார். இளையராஜாவுக்கு முன்பே இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்த பாரதிராஜா கதைகளை எழுதி நாடகங்களை போட்டு வந்தார். பாரதிராஜா உதவி இயக்குனராக வேலை செய்ய இளையராஜாவும் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.
பாரதிராஜா படங்கள்: இளையராஜா திரைப்படங்களில் இசையமைக்க துவங்கியதும் பாரதிராஜாவும் அவரும் இணைந்து பல அற்புதமான பாடல்களை கொடுத்தார்கள். பதினாறு வயதினிலே, மண்வாசனை, கடலோர கவிதைகள், முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை என சொல்லிக்கொண்டே போகலாம். பாரதிராஜா பற்றி பல வருடங்களுக்கு முன்பே இளையராஜா சிலாகித்து பேசியிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் பட விழாவில் பேசிய இளையராஜா ‘பாரதிராஜாதான் என்னை கைப்பிடிச்சி சென்னைக்கு கூட்டிட்டு வந்தான். இதான் பீச், அதான் ஏ.வி.எம் ஸ்டுடியோ என காட்டினான். அவன் என் நண்பனுக்கும் மேல. அது என்ன விதமான உறவுன்னு சொல்ல தெரியல. பாரதிராஜா இல்லேன்னா, இந்த இளையராஜா இல்ல’ என பேசியிருந்தார்.