ஒரு கைதியின் டைரி படத்தை இயக்கியவர் பாரதிராஜா. கதை எழுதியவர் பாக்கியராஜ். இந்தப் படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட 2 வேடங்களில் நடித்துள்ளார். ரேவதிதான் கதாநாயகி. ஜனகராஜ், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அப்போது ஊட்டியில் உள்ள கார்டன் மூடியிருப்பதாக பாரதிராஜாவுக்குத் தகவல் வந்தது. அன்று தான் அங்கு பாடல் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. இதனால் பாரதிராஜா டென்ஷன் ஆனார்.
என்ன விவரம் என்று கேட்க அப்போது தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஒரு அரசாங்க விஷயமாக ஊட்டி வந்து இருப்பதாகவும் கெஸ்ட் ஹவுஸில் ஓய்வு எடுத்து வருவதாகவும் அதனால் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்றார்கள். அந்த நிலையில் பாரதிராஜா அந்த டென்ஷனைப் படப்பிடிப்பில் உள்ள மற்றவர்களிடம் காட்ட ஆரம்பித்தார். உடனே சரி சிம்ஸ் பார்க்கில் சூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் பாரதிராஜா.
ஆனால் அப்போது பாரதிராஜாவுடன் போட்டோகிராபர் சங்கர் ராவும் இருந்தார். அவர் எம்ஜிஆரின் பல படங்களில் பணியாற்றியவர். அவருக்கு நெருக்கமான நட்பு கொண்டவர். அவர் என்ன சொன்னார்னா ‘சிம்ஸ் பார்க் தூரம் அதிகம். அங்கு போய் படப்பிடிப்பை முடிக்க முடியாது. அதற்குப் பதிலாக நான் ஒரு வழி சொல்றேன்’னு சொன்னார்.
அதென்னன்னு கேட்க நாம இருவரும் எம்ஜிஆரைப் போய்ப் பார்த்து நிலைமையைச் சொல்வோம் என பாரதிராஜாவிடம் கூறினாராம். பாரதிராஜாவும் சங்கர் ராவ் மீது இருந்த நம்பிக்கையில் எம்ஜிஆரைப் பார்க்க சென்றார். விவரம் அறிந்த எம்ஜிஆர் அப்படியா, நானும் பணி முடிந்து ஓய்வில் தான் இருக்கிறேன். சூட்டிங்கைப் பார்த்து நாளாச்சு. நானும் கிளம்பி வருகிறேன் என்றாராம்.
அந்தவேளையில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ்க்கு ஹார்ட் அட்டாக் அதனால் கோவையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்திருப்பதையும் சங்கர் எம்ஜிஆரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே எம்ஜிஆர் பாரதிராஜாவிடம் ‘யோவ் உனக்கு அறிவு இருக்காய்யா? இப்போ படப்பிடிப்பா முக்கியம். தம்பி உயிரு தான்யா முக்கியம்’னு கடிந்து கொண்டார் எம்ஜிஆர்.
உடனே தனது குடும்ப டாக்டரை போன் பண்ணி வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரையும் காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு இனி தம்பியின் உயிருக்குக் கவலை இல்லை. படப்பிடிப்பை நடத்துங்கள் என்றாராம். அதுமட்டும் அல்லாமல் படக்குழுவினர் 100 பேருக்கு மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்தாராம். அதில் 90 பேருக்கு அசைவ உணவும் பரிமாறப்பட்டதாம்.
