இவன ஏண்டா கூட்டிட்டு வந்த? நாசரை பார்த்து கோபப்பட்ட இயக்குனர்.. எந்த படத்துக்கு தெரியுமா?

by ராம் சுதன் |
இவன ஏண்டா கூட்டிட்டு வந்த? நாசரை பார்த்து கோபப்பட்ட இயக்குனர்.. எந்த படத்துக்கு தெரியுமா?
X

ஆகச்சிறந்த நடிகர்: தமிழில் ஆகச்சிறந்த நடிகர்கள் என முக்கியமான சிலரை குறிப்பிடலாம். அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் நடிகர் நாசர். இவர் கிடைத்தது தமிழ் சினிமாவிற்கே ஒரு பெரிய பொக்கிஷம் என்று சொல்லலாம். குணச்சித்திர வேடமாகட்டும் வில்லன் கேரக்டராகட்டும் அனைத்திலும் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்றுவிடுவார்.

இவருடைய நடிப்பில் தேவர் மகன், எம்டன் மகன், நாயகன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்கள் பெரிய அளவில் பாராட்டை பெற்றன. இந்த நிலையில் தான் நடித்த ஆவாரம்பூ படத்தை பற்றியும் அதில் எப்படி தான் நடித்தேன் என்பதை பற்றியும் நாசர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆவாரம்பூ படத்தின் தயாரிப்பாளருக்கு ஃபைனான்ஸ் செய்தவர் தயாரிப்பாளர் கே.ஆர்தானாம்.

திரும்பி வந்துவிடு: அவர்தான் நாசரை இந்தப் படத்திற்காக சிபாரிசு செய்திருக்கிறார். ஷூட்டிங் போகும் போது கே.ஆர். நாசரை அழைத்து ‘ நாசர் நாளைக்கு போ. இயக்குனர் ஓகே சொன்னால் நடி. இல்லையென்றால் திரும்பி வந்துவிடு’ என சொல்லியிருக்கிறார். இதை கேட்டதும் நாசருக்கு அதிர்ச்சி. என்ன கே.ஆர் இப்படி சொல்றீங்க? என கேட்டுவிட்டு ஷூட்டிங் கிளம்பினாராம் நாசர். அங்கு போனதும் படத்தின் இயக்குனரை சந்தித்திருக்கிறார் நாசர்.

ஆவாரம்பூ படத்தின் இயக்குனர் பரதன். இவர்தான் தேவர் மகன் படத்தையும் இயக்கியவர். மலையாளத்தில் மிகப்பெரிய் ஆளுமை. இவரிடம் சேர்ந்துஎப்படியாவது பணியாற்ற வேண்டும் என்பதே நாசரின் நீண்ட நாள் கனவாகவும் இருந்திருக்கிறது. நாசரை பார்த்ததும் பரதன் அருகில் இருந்த தன் உதவியாளரான கரீமை அழைத்து ‘ஏண்டா கரீமு இவன ஏண்டா கூட்டிட்டி வந்தீங்க? இந்த கேரக்டருக்கு இவன்லாம் செட்டாவானாடா?’ என்று நாசரை வைத்தே கேட்டாராம்.

வேற ஆள பாரு: அதற்கு கரீம் ‘ஃபைனான்ஸியர் சிபாரிசு செய்த ஆளு சார்’ என சொல்லியிருக்கிறார். இருக்கட்டும்டா.. ஒன்னு பண்ணு நாளைக்கு பஸ் ஸ்டாண்ட் அல்லது ஸ்டேஷன் எங்கேயாவது போய் நல்லா வாட்ட சாட்டமான ஆளை புடிச்சு கூட்டிட்டு வானு பரதன் கரீமிடம் சொல்லியிருக்கிறார். இதை கேட்க கேட்க நாசரின் மனதில் பொங்கிட்டு வந்ததாம். இருந்தாலும் கரீம் சமாளித்துக் கொண்டே இருந்தாராம்.

உடனே பரதன் அங்கு இருந்த மேக்கப் கலைஞரை அழைத்து அவர் வைத்திருந்த கத்தரிக்கோலால் நாசரின் தலைமுடியை கடகடவென வெட்டினாராம். அந்த நேரத்தில் நாசர் 10 படங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். பரதன் இப்படி பண்ணியதும் கூட கொஞ்சம் நாசருக்கு அதிர்ச்சி. ஆனாலும் பரதன் ஒட்டுமீசையை நாசரின் முகத்தில் வைத்து பார்த்துவிட்டு சரி நாளைக்கு வா என சொன்னாராம்.

அந்த கேரக்டருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா? ஆனால் இந்த சம்பவத்தால் நாசர் மிகவும் வேதனைப்பட்டாராம். ஏனெனில் ஒரு வார்த்தை கூட பரதன் நாசரை பார்த்து பேசவே இல்லை என்பதனால்தான். மறு நாள் ஷூட்டிங். எப்படி அவரை பார்க்க போகிறோம் என நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்க மறு நாள் ஸ்பாட்டுக்கு வந்தாராம் நாசர். அங்கு பரதனும் இருக்க ‘இந்தப் படத்தின் கேரக்டர் என்ன என்பதை சொன்னால் எனக்கு உபயோகமாக இருக்கும்’ என நாசர் பரதனிடம் கேட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அவர் நம்மிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டால் தனக்குள் இருக்கும் இறுக்கம் குறைந்துவிடும் என்பதால் கேட்டிருக்கிறார்.

பரதன் சிகரெட்டை பிடித்தப்படி ‘மாடோடு மாடாக நான் இருக்க’ என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். இன்னும் 10 நிமிடத்தில் முதல் ஷாட். பரதன் கூறியதை கேட்டதும் அங்கு அருகில் இருந்த இரண்டு காளை மாடுகளுடன் தன்னை நெருக்கமாக்கி எப்படி பார்க்கவேண்டும்? எப்படி முறைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு ஆவாரம்பூ படத்தில் நடித்ததுதான் அந்த கேரக்டர் என நாசர் கூறினார்.

Next Story