வடிவேலுவை அடிக்க ஓடிய பிரபுதேவாவின் அப்பா!.. ஓடி ஒளிந்துகொண்ட வைகைப்புயல்!...

by சிவா |

Vadivelu: நடிகர் ராஜ்கிரண் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வடிவேலு. மதுரையை சேர்ந்த இவருக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம். லாரி மூலம் சென்னை வந்து வாய்ப்பு தேடி கடைசியில் ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபுடி வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

ராஜ்கிரணிடம் அவ்வப்போது நடிக்க வாய்ப்பும் கேட்டு வந்தார். என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்டணியிடம் அடி வாங்குவது உள்ளிட்ட சில காட்சிகளில் அவரை நடிக்க வைத்தார் ராஜ்கிரண். அதன்பின் சின்ன கவுண்டர், சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் வடிவேலு.

ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படம் வடிவேலுவை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன்பின் பல படங்களிலும் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டது. துவக்கத்தில் அதிக கிராமத்து கதைகளில் நடித்து வந்தார்.

வின்னர், தலை நகரம் போன்ற படங்களின் காமெடி வடிவேலுவை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஒரு நாளைக்கு பல லட்சம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். இம்சை அரசன் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார். 90களில் எப்படி ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கவுண்டமணியின் காமெடி தேவைப்பட்டதோ அப்படி வடிவேலும் மாறினார்.

பிரபுதேவா - வடிவேலு காமெடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும், காதலன், ராசைய்யா உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ‘ஒய் பிளட்.. சேம் பிளட்’ என்கிற காமெடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ‘வடிவேலுவை நீங்கள் முதலில் எப்போது பார்த்தீர்கள்?’ என பிரபுதேவாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன அவர் ‘விஜயகாந்த் சார் நடித்த ஏழை ஜாதி படத்தில் ஒரு பாட்டுக்கு நான் ஆடிக்கொண்டிருந்தேன். என் அப்பாதான் அதற்கு டான்ஸ் மாஸ்டர். அந்த படத்தில் கும்பலோடு கும்பலாக நிற்கும் ஒரு சின்ன வேடத்தில் வடிவேலு நடித்தார். அவரிடம் ‘நீ போய் முன்னால் ஆடு’ என விஜயகாந்த் சொல்ல வடிவேலும் ஆசையோடு வந்து எனக்கு முன்னே ஆடிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த என் அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. ‘எவன்டா என் பையன் முன்னாடி ஆடுறான்’ என சொல்லி அவரை அடிக்க விரட்டினார். வடிவேலு பயந்து போய் ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டார். அவரிடம் நான் கேட்டதற்கு ‘விஜயகாந்த் அண்ணன்தான் ஆட சொன்னார்’ என பயந்து கொண்டே சொன்னார்’ என பிரபுதேவா சொல்லி இருக்கிறார்.

Next Story