பிரமிக்க வைக்கும் அன்னை இல்லம்... அட இத்தனைப் படப்பிடிப்புகள் நடந்துள்ளதா?

சிவாஜிகணேசன் 'அன்னை இல்லம்' என்று தனது மாளிகைக்குப் பெயர் வைத்தார். அதன்பெயரில் திரைப்படமும் எடுத்தார். அவர் பெயர் வைத்த ராசியோ என்னவோ 1000 அன்னை இல்லங்கள் தமிழகத்தில் உருவாயின. அன்னை இல்லம் என்றால் அன்னை ராஜா மணி அம்மாளின் பெயரை நினைவுகூறும் அவர்தம் அருந்தவப் புதல்வன் சிவாஜி மாளிகைதான் நினைவுக்கு வரும். இங்கு சிவாஜி நடித்த பல படங்கள் படமாகி உள்ளன. என்னென்னன்னு பார்க்கலாமா...
பாவை விளக்கு: சிவாஜியின் 64வது படமான பாவை விளக்கு தான் முதன் முதலில் அன்னை இல்லத்தில் படமாக்கப்பட்டது. படத்தின் முதல் காட்சியே அன்னை இல்லத்தில் தான் தொடங்கும். இதற்கு முன்பு வரை எந்த ஒரு கதாநாயகனின் வீட்டையும் தமிழ்சினிமாவில் படம்பிடித்தது இல்லை. தமிழ்சினிமாவில் முதல் அன்னை இல்லக் காட்சி என்ற சிறப்பைப் பெற்றது.
பாசமலர்: அதே போல பாசமலர் படத்திலும் அன்னை இல்லம் வருகிறது. சகோதரியான சாவித்திரிக்கு சொத்தையும், வீட்டையும் கொடுத்து விட்டுப் பலகாலம் கழித்து அந்த வீட்டைப் பார்க்க சிவாஜி வருவார். அப்போது ஏழ்மை நிலையில் வருபவரை வீட்டுக்குள் வரவிடாமல் செய்வார்கள். கந்தல் உடையில் நொந்த நிலையில் தன் வீட்டைத் தானே திரும்பிப் பார்ப்பார் சிவாஜி.
பந்தபாசம், பார் மகளே பார்: அடுத்து இவர் நடித்த பந்தபாசம் படம். இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியே அன்னை இல்லத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்கும். அடுத்து பார் மகளே பார் படத்தின் பல காட்சிகள் அன்னை இல்லத்தில் தான் படமாக்கப்பட்டு இருக்கும். குங்குமம் படத்தின் ஒரு காட்சியில் எஸ்எஸ்ஆர். அன்னை இல்லத்தின் வாசலில் இருந்து பேசிக் கொண்டு இருப்பார்.
கௌரவம்: கலாட்டா கல்யாணம் படத்தில் செந்தாமரை அன்னை இல்லத்தின் முன்பு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார். திருடன் படத்தில் அன்னை இல்லத்தின் போர்டிகோவில் வந்து கார் ஒன்று நிற்கும். அந்தப் படத்தில் சிவாஜியைத் திருடன் என்று சித்தரித்து இருப்பார்கள். கௌரவம் படத்தின் ஆரம்பக் காட்சியில் கார் அன்னை இல்லத்திற்குள் நுழைவதைப் போல காட்டப்பட்டு இருக்கும்.
தங்கப்பதக்கம், திரிசூலம்: தங்கப்பதக்கம் படத்தில் குழந்தையைக் கடத்தியவன் அந்த வீட்டின் முதலாளியிடம் போன் செய்து மிரட்டுவார். அந்த முதலாளியின் வீடுதான் அன்னை இல்லம். அண்ணன் ஒரு கோவில் படத்தில் பல காட்சிகள் அன்னை இல்லத்தில்தான் படமாக்கப்பட்டன. திரிசூலம் படத்தில் சிவாஜி ஆரம்பமாகும் முதல் மற்றும் இறுதிக் காட்சி அன்னை இல்லம்தான்.
சிவாஜிக்கு இது 200வது படம். சூப்பர்ஹிட் ஆனது. அடுத்து ரத்த பாசம் படத்தில் சிவாஜி அறிமுகமாகும் காட்சி அன்னை இல்லத்தில்தான் படமாக்கப்பட்டு இருக்கும். போலீஸ் உடையில் மிடுக்காக வீட்டிற்குள் நடந்து வருவார்.
வெற்றி விழா: அடுத்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கமல், பிரபு நடித்த படம் வெற்றி விழா. இந்தப் படத்தில் இந்தி வில்லன் சலீம் கௌஸ் அறிமுகமாவது அன்னை இல்லத்தில்தான் எடுக்கப்பட்டு இருக்கும். பிரபுவின் 100வது படமான ராஜகுமாரன் படத்தில் நடிகர் திலகம் நடந்து வந்து பிரபுவுக்கு ஆசிர்வாதம் வழங்குவது அன்னை இல்லத்தில்தான். விஜய் உடன் பிரபு நடித்த தெறி படத்தில் வில்லன் மகேந்திரன் வரும் காட்சிகள் அன்னை இல்லத்தில் படமாக்கப்பட்டு இருந்தது.