அந்தப் படத்துக்காக நெஞ்சைக் கிழித்துக் கொண்ட சிவக்குமார்... இப்படி எல்லாமா நடந்தது?

by sankaran v |
அந்தப் படத்துக்காக நெஞ்சைக் கிழித்துக் கொண்ட சிவக்குமார்... இப்படி எல்லாமா நடந்தது?
X

இயக்குனர்களில் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிடத்தக்கவர். இவர் நாலரை அடி உயரம்தான் இருப்பார். 'தொள தொள' சட்டை போட்டு இருப்பார். ஆனால் செட்டுக்குள் இவர் வந்தாலே எந்த நடிகர் ஆனாலும் ஆடிப்போவார்களாம். இவர் சொன்னபடிதான் நடித்துக் காட்ட வேண்டுமாம்.

பத்துவிதமான கேரக்டர்: இவர் பத்துவிதமான கேரக்டர்களுக்கும் இவரே நடித்துக் காட்டி விடுவாராம். ஒரு இயக்குனருக்கான எந்த அடையாளமும் இவர் தோற்றத்தில் இருக்காதாம். சில சமயம் சட்டையே போடாமல் கூட படப்பிடிப்புக்கு வந்து விடுவாராம்.

கண்கண்ட தெய்வம்: இவரது இயக்கத்தில் கண்கண்ட தெய்வம் படத்துக்காக நடிகர் சிவக்குமார் ஒரு பாடல்காட்சிக்கு நடிக்க வேண்டி இருந்ததாம். அதற்குத் தயார் படுத்தும் வகையில் தங்கப்பன் மாஸ்டரிடம் போய் நடனம் எல்லாம் கற்றுக்கொண்டு வந்தாராம். இயக்குனரிடம் அதுபற்றி சிவக்குமார் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.

மரத்து மேல டான்ஸ்: 'நீ தரையில் ஆடப்போறது இல்ல. மரத்து மேலதான் உட்கார்ந்து இருக்கப்போற. அங்குதான் உட்கார்ந்தபடி நீ ஆட வேண்டும்' என்று சொன்னதும் சிவக்குமாருக்குத் தூக்கி வாரிப் போட்டதாம். அதனால் மறுநாளே தென்னைமரத்துல ஏறுவதற்குப் பயிற்சி எடுத்துள்ளார்.

மேலே சரசரவென ஏறி முக்கால் பங்கு உயரத்துக்கு வந்துவிட்டார். கீழே அவருக்கு டிரெய்னிங் கொடுத்த ஆள்கள் எல்லாம் பாதுகாப்பிற்காக நிக்கிறாங்க. மேலே போனவருக்குப் பயம் வந்துவிட்டது. கீழே பார்த்தார் என்ன செய்றதுன்னு? 'ஐயா இன்னும் கொஞ்சம் உயரம்தான் ஏறுங்க. இல்லன்னா கீழே விழ வேண்டி இருக்கும்.

பயந்த சிவக்குமார்: அப்படியும் இல்லன்னா மரத்தைப் புடிச்சபடியே வேகமா வழுக்கிக்கிட்டு வந்துருங்க. ஆனா கொஞ்சம் காயம் வரும்'னு சொல்லிருக்காங்க. 'இல்லன்னா கீழே விழ வேண்டியதுதான்'னு சொன்னதும் சிவக்குமார் பயந்து போய் நான் காயம் ஆனாலும் பரவாயில்லை. கீழே வழுக்கியபடி வந்துடறேன்னாராம்.

நெஞ்செல்லாம் காயம்: அப்படி வேகமா அவர் வரும்போது நெஞ்செல்லாம் மரப்பட்டைகள் உராய்ந்து கிழிந்து ரத்தமாகக் கொட்ட ஆரம்பித்து விட்டதாம். உடனே அதை மறைக்க கழுத்தளவு பெரிய பனியனைப் போட்டு அதன்மேல் சட்டையையும் போட்டுக் கொண்டு சூட்டிங் வந்தாராம்.

எதுக்கு பயிற்சி: இயக்குனர் என்ன இந்த மாதிரி டிரஸ் போட்டுருக்கேன்னு சொன்னதும் மரத்துல ஏற பயிற்சி எடுத்தேன்னு நடந்ததைச் சொன்னாராம். அட இதுக்கு எதுக்கு பயிற்சி. நாங்க ஏணி கொண்டு வர மாட்டோமா... அதுல தான் ஏறிக்கலாமேன்னு சொன்னாராம். அப்புறம்தான் அவருக்கு அந்த எண்ணமே வந்ததாம். அப்போதான் அவர் சினிமாவுக்கு வந்த புதுசு என்பதால் இதுபோன்ற ஐடியாவே வரவில்லையாம்.

Next Story