விஜயிடம் கதை சொன்னப்போ? நான் பண்ண ஒரே தப்பு.. சுசீந்திரன் பகிர்ந்த சீக்ரெட்

by ராம் சுதன் |
விஜயிடம் கதை சொன்னப்போ? நான் பண்ண ஒரே தப்பு.. சுசீந்திரன் பகிர்ந்த சீக்ரெட்
X

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன். முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு என அடுத்தடுத்த வெற்றியை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். வெற்றி இயக்குனராகவே மாறி வந்த சுசீந்திரன் சிம்புவை வைத்து ஈஸ்வரன் என்ற படத்தை எடுத்தார்.

ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. என்னதான் பல வெற்றியை கொடுத்தாலும் ஒரே ஒரு தோல்வி ஒரு இயக்குனரை அகல பாதாளத்தில் கொண்டு போய்விடும். அப்படித்தான் சுசீந்திரன் கெரியரும் மாறியது. ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சொல்லும்படியாக எந்தப் படமும் அமையவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் ஒரு படத்தை எடுத்தார்.

இப்போதுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு காதல் கதையை படமாக்கினார் சுசீந்திரன். இன்றைய இளம் தலைமுறையில் காதலை விளக்கும் விதமாக 2கே லவ் ஸ்டோரி என்ற பெயரில் படத்தை உருவாக்கினார். இந்த படத்தின் மூலம் சுசீந்திரனும் இமானும் 10வது முறையாக கூட்டணி அமைத்தனர். இந்த நிலையில் விஜயை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் நான் பண்ண சிறிய தவறால் அந்த வாய்ப்பு அமையாமல் போய்விட்டது என கூறியிருக்கிறார் சுசீந்திரன்.

நான் மகான் படம் முடிந்ததும் விஜய்க்கு கதை சொன்னேன். அது அவருக்கு செட் ஆகல. அதன் பிறகு பாண்டிய நாடு படம் முடிந்ததும் சூர்யாகிட்ட கதை சொன்னேன். அந்த கதை படமாக்கப்படவில்லை. அந்த சந்தர்ப்பம் ஒரு பெரிய வெற்றிக்கு பிறகு நடக்கும். பாண்டிய நாடு வெற்றிக்கு பிறகு விஜயை மீண்டும் ஜில்லா பட செட்டில் சந்தித்தேன். அப்பொழுது நான் பண்ண தப்பு என்னவெனில் பாயும் புலி படத்திற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்.

அப்போது விஜயின் மேனேஜர் என்னிடம் அடுத்த படம் ஒப்பந்தமாகி விட்டீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னேன். அப்போ அந்தப் படம் முடிந்த பிறகு வேறொரு படத்திற்கு வருவீர்களா என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னேன். உடனே மேனேஜர் ‘ஓகே சார் அதை முடிச்சிட்டு வாங்க. நான் விஜய் சார்கிட்ட அப்பாய்மெண்ட் வாங்கித்தரேன்’ என்று கூறினார். பாயும் புலி நடந்து கொண்டிருந்த போதே திடீரென புலி என்று டைட்டில் அறிவிப்பு வருது. இந்தப் பக்கம் பாயும் புலி என டைட்டில் அறிவிப்பு வருது. இதற்கு நானும் உடந்தையாக இருக்கிறேனே என்று நினைத்தேன் என சுசீந்திரன் ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story