25 அடியிலிருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங்கில் நடந்த ஷாக்!...

Vijayakanth: விஜயகாந்த் சண்டை காட்சிகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகத்தான் ரசிகர்களிடம் காட்டிக்கொண்டார். எம்.ஜி.ஆரை போல ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. அதனால்தான் அவரின் ரூட்டிலேயே விஜயகாந்த் போனார்.
போலீஸ் வேடம்: விஜயகாந்த் பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அது அவருக்கு மிகவும் பிடித்த வேடம். ஏனெனில், தப்பை தட்டிக்கேட்கும் தைரியமும், அதிகாரமும் போலீஸுக்கே இருக்கிறது என்பது அவரின் எண்ணம். அதனால்தான் போலீஸ் அதிகாரி வேடத்தில் பல படங்களிலும் நடித்தார்.
பொதுவாக சண்டைக்காட்சிகளில் பெரிய நடிகர்கள் டூப் போட்டு நடிப்பார்கள். அதாவது, ரிஸ்க்காக இருக்கும் காட்சிகளில் ஹீரோவுக்கு பதில் இன்னொருவரை வைத்து எடுப்பார்கள். இது காலம் காலமாக இருப்பதுதான். ஆனால், விஜயகாந்துக்கு பதில் டூப் நடிகரை போட்டு இதுவரை யாரும் எடுத்தது இல்லை. ஏனெனில், எல்லா காட்சியிலும் விஜயகாந்தே துணிந்து நடிப்பார்.
சண்டை காட்சிகளில் டூப்: பட இயக்குனரோ, ஸ்டண்ட் இயக்குனரோ அவரிடம் சென்று ‘உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது?’ எனக்கேட்டால், ‘அப்போ அவனுக்கு ஏதாவது ஆனா பரவாயில்லையா?.. அவனுக்கு மட்டும் குடும்பம் இல்லையா?’ என கேட்பார். அதுதான் விஜயகாந்த். அப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கும்போது பலமுறை அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
அவரின் வலது தோள்பட்டையே சற்று கீழே இறங்கிவிட்டது. அதற்கெல்லாம் அவர் கலங்கியதே இல்லை. தலைகீழாக பல மணி நேரம் தொங்கி கூட அவர் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான், இயக்குனர் செல்வமணி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
கீழே விழுந்த விஜயகாந்த்: கேப்டன் பிரபாகரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை எடுத்தபோது ஒரு பெரிய பாறை மீது விஜயகாந்த் ஏறுவது போல காட்சியை எடுத்தோம். அப்போது விஜயகாந்தின் உடலில் கட்டியிருந்த கயிறு அறுந்துவிட்டது. 25 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். ஆனாலும், அவர் அசரவில்லை. மீண்டும் அந்த காட்சியில் நடித்து கொடுத்தார். அந்த இடத்திற்கு 40 கிலோ மீட்டர் நடந்தே சென்றோம். அந்த 40 கிலோ மீட்டர் தூரமும் கேப்டன் தனது சொந்த செலவில் ரோடு போட்டு கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார்.