நான் இதை செய்ய மாட்டேன்!.. ஜெயலலிதாவிடமே கறாரா சொன்ன இயக்குனர் விக்ரமன்!..

Jayalalitha: கோலிவுட்டில் ரத்தம், அதிரடி சண்டை காட்சிகள், வன்முறை போன்ற விஷயங்கள் எதுவுமில்லாமல் மென்மையான திரைப்படங்களை இயக்கியவர் விக்ரமன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் புது வசந்தம். ஆர்.பி.சவுத்ரி இயக்கத்தில் முரளி, சார்லி, ஆனந்தபாபு, ராஜா மற்றும் சித்தரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
புது வசந்தம்: திருமணம் ஆகாத 4 ஆண்களுடன் ஒரு பெண் நட்பாக பழக முடியும், அவர்களோடு ஒரே வீட்டில் தங்கியிருக்க முடியும் என நாகரீகமாக கதையை அமைத்து படத்தை உருவாக்கியிருந்தார். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து படமும் வெற்றி பெற்றது.
அதன்பின், புதிய மன்னர்கள், கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, சென்னை காதல், மரியாதை, நினைத்தது யாரோ போன்ற படங்களை இயக்கினார்.
விஜய்க்கு பூவே உனக்காக: விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம்தான் விஜயின் சினிமா கெரியரை மாற்றியது. சரத்குமாரை வைத்து இயக்கிய சூர்ய வம்சம் தமிழ் சினிமாவில் இதுவரை மிகவும் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என்கிற பெருமையை பெற்றது. விஜயகாந்துக்கும் வானத்தை போல சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
விக்ரமன் மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். மனதில் ஒன்று வெளியே ஒன்று என பேசும் பழக்கம் அவருக்கு இல்லை. இதனாலேயே படப்பிடிப்பு நடக்கும்போது பல நடிகர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஒருகட்டத்தில் விக்ரமன் சொல்வது சரி என்பதை புரிந்துகொண்டு அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்துவிடுவார்கள்.
ஜெயலலிதா வீடியோ: சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விக்ரமன் ‘ 2016ம் வருடம் தேர்தல் வந்தபோது சசிகலா என்னை போனில் அழைத்து உங்களின் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படம் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். அதிமுகவின் சாதனைகளை சொல்லும் ஒரு பிரச்சார படத்தை நீங்கள் எடுத்து தர வேண்டும் என அம்மா விரும்புகிறார்’ என சொன்னார். எனக்கு அதெல்லாம் எடுக்க தெரியாது மேடம்’ என சொன்னேன். ‘நீங்கள்தான் எடுத்து தர வேண்டும் என அம்மா ஆசைப்படுகிறார்’ என அவர் சொல்ல அடுத்தநாள் காலை 10 மணிக்கு போயஸ்கார்டன் வீட்டில் ஜெயலலிதா மேடத்தை சந்தித்தேன்.
அவரும் அதை சொல்ல ‘நான் எடுத்து கொடுக்கிறேன் மேடம். ஆனால், அதிமுகவின் சாதனைகள் பற்றி மட்டுமே சொல்லுவேன். எதிர்கட்சிகள் பற்றி நெகட்டிவாக எதையும் சொல்ல மாட்டேன். நான் எனது படங்களையே பாசிட்டிவாக மட்டும் எடுப்பேன்’ என சொன்னேன். அதற்கு அவரும் ‘அப்படியே எடுங்கள்’ என சொன்னார். 5 நாட்களில் அந்த படத்தை எடுத்து கொடுத்தேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது’ என சொல்லியிருக்கிறார்.