எம்ஜிஆரே புகழ்ந்த காமெடி நடிகர்... வேறு யாருக்கும் கிடைக்காத பாக்கியம்..! யாரு அந்த லக்கிமேன்?
எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான் நடிகர்கள் சினிமாவில் கோலோச்சிய காலகட்டம். நகைச்சுவையில் பல நடிகர்கள் வந்தார்கள். சந்திரபாபு, மனோரமா, நாகேஷ், உசிலைமணி, குண்டு கல்யாணம், போண்டாமணி அப்படி இப்படின்னு வந்து போனாங்க. ஆனால் இவர்களில் நாகேஷைத் தான் பலரும் ரசித்தார்கள். உடல் மொழியே அவருக்கு பிளஸ் பாயிண்ட்.
அவர் படங்களில் நடித்தால் 40 சதவீதம் கேரண்டி. படம் வெற்றி தான் என்று எம்ஜிஆரே தெரிவித்துள்ளார். தேவர் பிலிம்ஸ், ஏவிஎம், பத்மினி பிக்சர்ஸ், ஏ.பி.நாகராஜன் என அனைவரின் படங்களிலும் நடித்துத் தூள் கிளப்பியுள்ளார் நாகேஷ்.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நாகேஷ் வரும் காட்சிகள் எல்லாம் அதகளமாக இருக்கும். வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார். அதே போல தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தியாக வந்து பட்டையைக் கிளப்புவார்.
திருவிளையாடல் படத்தில் வரும் தருமி கேரக்டரை இன்றும் மறக்க முடியாது. அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிவாஜிக்கே டஃப் கொடுத்து இருப்பார். அவரிடம் கேள்வி கேட்கும்போது பின்புறமாக கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து கொண்டே நடந்து கொண்டு கேள்வி கேட்கும் அழகோ அழகு தான். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிச்சிறப்பு.
சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் ஹீரோவாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என்றும் நிரூபித்து இருப்பார். இயக்குனர் சிகரம் பாலந்தர் இயக்கிய படம் இது. அவருக்குப் பிடித்த நடிகர் என்றால் அது நாகேஷ் தான். அடிக்கடி கமலிடம் நாகேஷைப் பார்த்து நடிக்கக் கத்துக்கோங்கப்பான்னு சொல்வாராம்.
காதலிக்க நேரமில்லை படத்தில் செல்லப்பாவாக வந்து அசர வைப்பார். பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி படங்கள் அவரது டிரேடு மார்க். எதிர்நீச்சல் படத்தில் மாடிப்படி மாதுவாக வந்து சென்டிமென்ட் சீன்களிலும் தூள் கிளப்பி இருப்பார்.
வேட்டைக்காரன், கலாட்டா கல்யாணம், நூற்றுக்கு நூறு, ஊட்டி வரை உறவு என இவர் நடித்த படங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையிலும் முத்தாய்ப்பான நடிப்பு தான். இவர் சாகாவரம் பெற்ற கலைஞன் என்பார்கள். ஏன்னா எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனிமுத்திரை பதித்து விடுவார்.