மதுவுக்கு அடிமையான இயக்குனர்.. படத்தை கார்த்திக்கே டைரக்ட் செய்து மாஸ் காட்டிய சம்பவம்

by Rohini |   ( Updated:2025-01-21 07:04:11  )
karthick
X

நவரச நாயகன் என அன்போடு சினிமாவில் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். சினிமாவில் மிகவும் துருதுருவென அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்தவர். குறிப்பாக அந்த காலத்தில் பெரும்பாலான நடிகைகளின் கனவு நாயகனாக திகழ்ந்தவர். அதற்கேற்ப பிளே பாயாகவும் இருந்தவர்தான் கார்த்திக். பெரும்பாலும் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற விமர்சனம் கார்த்திக் மீது இருந்தது.

ஆனால் ஒரு முறை படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் எல்லாமே பெர்ஃபெக்டாக நடித்து முடித்துக் கொடுத்துவிடுவார் என்றே அவரை பற்றி சொல்வார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் டி சிவா கார்த்திக்கை வைத்து தயாரித்த முதல் படம் தெய்வவாக்கு. கிழக்கு வாசல் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய மது என்பவர்தான் தெய்வவாக்கு படத்தின் இயக்குனராக இருந்தார்.

படத்தின் கதை முதலில் கார்த்திக்கு பிடிக்கவில்லை. அதன் பிறகு சில மாற்றங்களை செய்து கொண்டுவர அதுவும் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் நாடோடித்தென்றல் படத்தில் நடிக்க பாரதிராஜாவிடம் இருந்து அழைப்பு வர கார்த்திக் அங்கு போய்விட்டார். இன்னும் ஆறு மாதம் என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என அந்தப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

பின் தெய்வ வாக்கு படத்தின் கதை ஒரு சாமி அருள் வாக்கு சொல்வது போல மாற்றி முதலில் குஷ்பூ நடிப்பதாக இருந்து பின் ரேவதி மாற்றப்பட்டார். இதன் பிறகு கார்த்திக் இந்தப் படத்திற்குள் நுழைகிறார். இதற்கிடையில் படத்தின் இயக்குனர் மது மதுவுக்கு அடிமையாக முழுவதுமாக பாட்டில் கையுடன் தான் இருந்தாராம். மறு நாள் காலையில் படிக்கட்டு அருகே மனோரமா காலை பிடித்து ‘ஆச்சி நீங்க போகக் கூடாது ஆச்சி. உங்களை வைத்துதான் முதல் ஷாட் எடுக்கணும். போகாதீங்க’ என மது மன்றாடிக் கொண்டிருந்தாராம்.

அதற்கு மனோரமா ‘இல்ல மது எனக்கு ஃபிளைட்டுக்கு டைம் ஆகிவிட்டது. நான் போகணும்’என இவர் சொல்ல இயக்குனர் மது மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாராம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் தெய்வவாக்கு படத்தில் மனோரமாவே கிடையாது. வேறொரு படத்திற்காக மனோரமா அங்கு வந்திருக்கிறார்.

தெய்வவாக்கு படத்தில் மனோரமா கிடையாது என்பது கூட தெரியாமல் அவரை டார்ச்சர் செய்திருக்கிறார் மது. அந்தளவுக்கு குடி அவரை மூழ்கடித்திருக்கிறது. இருந்தாலும் கிழக்கு வாசல் படத்தில் மனோரமாவுக்கும் மதுவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததனால்தான் அவர் டார்ச்சர் செய்தும் மனோரமா கோபப்படாமல் மதுவை சமாளித்திருக்கிறார்.இதை கார்த்திக்கிடம் போய் சொல்ல மதுவையும் பிளைட் ஏறி போகச் சொல்லுங்கள் என சொல்லிவிட்டு உதவி இயக்குனர்களை அழைத்தாராம் கார்த்திக்.


இன்று என்னென்ன காட்சி இருக்கு என கேட்டறிந்து கிட்டத்தட்ட 28 நாள்கள் அந்தப் படத்தை கார்த்திக் தான் இயக்கினாராம். இதை தயாரிப்பாளர் டி. சிவா ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story