சிவாஜி ரசிகர் செய்த குறும்பு!.. நடிகர் திலகம் மீதே ஆட்டோகிராப் போட்ட எம்.ஜி.ஆர்!..
Mgr Sivaji: 1950 முதல் 1970 வரை திரையுலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் போட்டி நடிகர்களாக வலம் வந்தார்கள். இருவருக்குமே அதிக அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். ஆக்ஷன் காட்சிகளையும், புரட்சிகரமான மற்றும் தத்துவ பாடல்களையும் விரும்பியவர்கள் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களாகவும், நடிப்பு, நல்ல கதை ஆகியவற்றை விரும்பியவர்கள் சிவாஜி ரசிகர்களாகவும் இருந்தார்கள்.
இப்போது இருப்பது போல அப்போதும் எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களுக்கிடையே மோதல் இருக்கும். எம்.ஜி.ஆர் படம் வெளியானால் தியேட்டரில் கட் அவுட் வைப்பது, தோரணம் கட்டுவது, பாலாபிஷேகம் வைப்பது என ரசிகர்கள் கொண்டாடுவார்கள். சிவாஜி படம் வெளியாகும்போது அவரின் ரசிகர்களும் அதையே செய்வார்கள்.
எம்.ஜி.ஆர் சிவாஜி: எம்.ஜி.ஆர் சண்டைக்காட்சிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவது போன்ற கதைகளில் நடித்து மக்கள் தலைவராக மாறினார். சிவாஜியோ நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள குடும்ப செண்டிமெண்ட் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து நடிகர் திலகமாக மாறினார். சிவாஜி படங்களை பார்த்தால் பெண்களுக்கு அழுகை வரும். எம்.ஜி.ஆர் படம் பார்த்தால் ஆண்களுக்கு உற்சாகம் பிறக்கும். இறுதிவரை இந்த ஸ்டைலை இருவரும் பின்பற்றினர்கள்.
இருவரும் போட்டி நடிகர்களாக இருந்தாலும், அரசியலில் இருவரும் வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதித்து நடந்தார்கள். சிவாஜியை எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆரை சிவாஜியும் எங்கேயும், எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நேரில் கண்டு இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்வார்கள். ஏனெனில், சிறு வயதிலிருந்தே இருவரும் நட்புடன் பழகியவர்கள்.
இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெறும். சிலசமயம் யாரே ஒருவரின் படம் தோல்வியும் அடையும். சிவாஜியை இயக்கும் நடிகர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் போக மாட்டார்கள். அதேபோல், எம்.ஜி.ஆரை இயக்கும் இயக்குனர்கள் சிவாஜி பக்கம் போக மாட்டார்கள். அரிதாக சில இயக்குனர்கள் மட்டுமே சில படங்களை இயக்கினார்கள்.
ஒரே நேரத்தில் ரிலீஸ்: 1960ம் வருடம் டிசம்பர் 31 ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி முதன் முதலாக நடித்த ‘விடி வெள்ளி’ படம் வெளியாக, அடுத்த நாள் ஜனவரி 1ம் தேதி எம்.ஜி.ஆரின் அரசிளங்குமாரி படம் வெளியானது. இரண்டு படங்களுமே ஹிட் அடித்தது. படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் திருவாரூர் சென்றிருந்தார். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அப்போது ஒரு குறும்பு ரசிகர் சிவாஜியின் போட்டோவை எம்.ஜி.ஆரிடம் காட்டி அதில் ஆட்டோகிராப் கேட்டார்.
அந்த ரசிகரின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் அந்த புகைப்படத்தில் ‘வாழ்க திராவிடம்’ என எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார் எம்.ஜி.ஆர். இது எம்.ஜி.ஆரின் குறும்பு.