சினிமா ஆசையே இல்லாமல் இருந்த பாண்டியன்... அப்புறம் எப்படி கலக்கினாரு?
எல்லாரும் சினிமாவைத் தேடிப் போவாங்க. ஆனா அந்த சினிமாவே பாண்டியனைத் தேடிப் போனதுன்னு தான் நான் சொல்வேன். மண்வாசனைப் படத்தில் நடிப்பதற்கு முன்னால சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சதவீதம்கூட பாண்டியனுக்குக் கிடையாது. முதல் சந்திப்பிலேயே அவரைக் கதாநாயகன் ஆக்கினார்
பாரதிராஜா: மண்வாசனைப் படத்தில் பாண்டியனுக்குப் பாரதிராஜா கொடுத்த கதாபாத்திரம் அவருக்கு அளவு எடுத்துத் தைத்த சட்டை மாதிரி கனகச்சிதமாகப் பொருந்தியது. தன் மீது பாரதிராஜா வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாகக் காப்பாற்றினார் பாண்டியன் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் அவருக்கு நடிக்கறதுக்கு ஆர்வம் இல்லாம இருந்தாலும் மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டார். மண்வாசனை படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களிலே நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
மதுப்பழக்கம்: பெரிய உயரத்துக்குச் செல்ல வேண்டிய பாண்டியனைக் காலம் நம்மிடம் இருந்து பிரித்துக் கொண்டது என்றால் அதுக்கு முக்கிய காரணம் இதுதானாம். அதாவது பாண்டியனை ஒருகாலத்தில் தொற்றி இருந்த மதுப்பழக்கம்தான். அதுதான் வருத்தத்திற்குரிய விஷயம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
ஹீரோவைத் தேடி: மண்வாசனை படத்திற்காக பாரதிராஜா ஹீரோவைத் தேடி அலைந்தது பெரிய கதை. யாருமே கிடைக்காமல் கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு தன் வேதனையை அம்பாளிடம் கோரிக்கையாக வைத்து விட்டு வந்து இருக்கிறார். வரும் வழியில் கோவில் வாசலில் வளையல் கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு இளைஞன் அவர் கண்ணில் பட்டுள்ளார்.
தன் கதைக்கு ஏற்ற நாயகன் இவன்தான் என்று முடிவு செய்து அவனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து கதாநாயகன் ஆக்கினார். எந்தவித நடிப்பும் சினிமா ஆசையும் இல்லாமல் இருந்த பாண்டியன் ஒரே படத்தில் பாரதிராஜா சொல்லிக்கொடுத்த படி நடித்து பிரபலம் ஆகிவிட்டார் என்பது ஆச்சரியம்தான்.
மண்வாசனை: ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் சக்கை போடு போட்டது. 1983ல் பாரதிராஜா இயக்கத்தில் சித்ரா லட்சுமணன் தயாரித்த படம் மண்வாசனை. பாண்டியன், ரேவதி, வினுசக்கரவர்த்தி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. ஆனந்த தேன், அரிசி குத்தும், பொத்தி வச்ச ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன.