அந்த ரஜினி படம் ஓடல!. ஆனாலும் அஜித்தை வச்சி ரீமேக் பண்ணேன்!.. இப்படி சொல்லிட்டாரே இயக்குனர்!..
Rajinikanth: ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் எடுப்பதை ரீமேக் என சொல்வார்கள். பெரும்பாலும் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்டு ஹிட் அடிக்கப்பட்ட படத்தை மற்றொரு மொழியில் ரீமேக் செய்வார்கள். தமிழில் ஹிட் ஆன படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு போகும்.
அதேபோல், ஹிந்தியில் ஹிட் அடித்த திரைப்படங்கள் தமிழுக்கு வரும். இப்போது இது குறைந்துவிட்டது. ஆனால், 80களில் பல ஹிந்தி படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிதாப்பச்சன் நடித்த பல ஹிந்தி படங்களின் கதையை ரீமேக் செய்து ரஜினி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நான் அடிமை இல்லை, சிவா என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஹிந்தி பில்லா: அப்படி அவர் நடித்து 1980ல் வெளியான திரைப்படம்தான் பில்லா. ஹிந்தியில் இப்படம் சூப்பர் ஹிட். காரணம் கதை அப்படி. டான் பில்லா போலீஸ் சுட்டதில் இறந்துவிடுவான். அதன்பின் அவனை போலவே இருக்கும் மற்றொருவனை போலீஸ் அதிகாரி கேங்ஸ்டர் கூட்டத்திற்கு அனுப்புவார். அதன்பின் என்ன நடக்கும் என்பதுதான் கதை.
அஜித் பில்லா: இதே கதையை விஷ்ணுவர்தன் இயக்கி அஜித் நடித்து பில்லா என்கிற தலைப்பிலேயே 2007ம் வருடம் ஒரு படம் வந்தது. இந்த படத்தில் அஜித்தை மிகவும் ஸ்டைலாக காட்டியிருந்தார் விஷ்ணு வர்தன். இந்த படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா போட்ட தீம் மியூசிக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அஜித் அப்போது தொடர் தோல்விப்படங்களை கொடுத்து வந்தார். இதை அவர் ரஜினியிடம் சொல்ல ‘நீங்கள் பில்லா படத்தை ரீமேக் செய்து நடியுங்கள்’ என ரஜினிதான் ஐடியா கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் ஊடகம் ஒன்றில் கொடுத்துள்ள பேட்டி ரஜினி ரசிகரக்ளை கோபப்படுத்தியிருக்கிறது.
ரஜினி பில்லா: ரஜினி சார் நடித்து 80களில் வெளிவந்த பில்லா படம் ஓடவில்லை. எனவே, இந்த படத்தையா ரீமேக் செய்வது என யோசித்தேன். எனவே, அந்த படத்தில் எனக்கு என்ன பிடித்தது என்று மட்டும் பார்த்தேன். அந்த டான் வேடம் எனக்கு பிடித்திருந்தது. அதை வைத்து என் ஸ்டைலில் திரைக்கதை எழுதினேன்’ என சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து ‘ரஜினியின் பில்லா படம் சூப்பர் ஹிட். அதனால்தான் அஜித்தை அதன் ரீமேக்கில் நடிக்கும்படி சொன்னார். அஜித்துக்கு வாழ்க்கை கொடுத்தது எங்கள் தலைவர்தான். உண்மை தெரியாமல் இப்படி உளரக்கூடாது’ என ரஜினி ரசிகர்கள் விஷ்ணு வர்தனை திட்டி வருகிறார்கள்.