எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அதே சம்பளம் வேணும்!.. சிவாஜி கறார் காட்டிய ஒரே ஒரு படம்!...

Mgr Sivaji: எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சம காலத்தில் சினிமாவில் கோலோச்சியவர்கள். சிவாஜியை விட எம்.ஜி.ஆர் வயதில் மூத்தவர். இருவருமே சின்ன வயதிலேயே நாடகத்திற்கு போனாலும் நாடக அனுபவத்தில் சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் சீனியர். எனவே, இருவரும் அண்ணன், தம்பிகளாக பாசமாக பழகியுள்ளனர்.
சிறுவனாக இருக்கும் போது எம்.ஜி.ஆரின் வீட்டில் சிவாஜி பல முறை சாப்பிடுவாராம். அதேபோல், சிவாஜியின் வீட்டுக்கு எம்.ஜி.ஆரும் போவார். சிவாஜிக்கு திருமண ஏற்பாடு நடந்தபோது முன் நின்று எல்லா வேலைகளையும் செய்தவர் எம்.ஜி.ஆர்,தான். எம்.ஜி.ஆர் 10வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு சினிமாவில் ஹீரோவாக மாறினார்.
ஆனால், சிவாஜியோ முதல் படம் பராசக்தியிலேயே ஹீரோவாக நடித்தார். 60களில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் இடையே போட்டி இருந்தாலும் இருவருக்குள்ளும் நல்ல அன்பும், பரஸ்பர மரியாதை இருந்தது. எம்.ஜி.ஆர் பாமர மக்களுக்கு பாடுபடும் கம்யூனிஸ்ட் வேடத்தில் நடிப்பார். சிவாஜியோ குடும்ப பாங்கான செண்டிமெண்ட் காட்சிகளில் நடித்தார்.
இருவரின் ஸ்டைல் வேறாக இருந்தாலும் இருவரின் படங்களுமே நல்ல வசூலை பெற்றது. சிவாஜியை பொறுத்தவரை ஒரு படத்தில் நடிக்க கதை கேட்பதோடு சரி. மற்றபடி எவ்வளவு நாட்கள் கால்ஷீட் மற்றும் என்ன சம்பளம் என்பதையெல்லாம் அவரின் தம்பி சிவி சண்முகம்தான் தயாரிப்பாளரிடம் பேசுவார். ஆனால், சிவாஜியே ஒருமுறை எம்.ஜி.ஆருக்கு நிகரான சம்பளம் கேட்ட சம்பவம் பற்றி பார்ப்போம்.
எம்.ஜி.ஆரை வைத்து ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தை தயாரித்தவர் நாகி ரெட்டி. இவரின் தயாரிப்பில் வாணி ராணி என்கிற படம் உருவானது. அது ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக். இந்த படத்திற்கு வசனம் எழுதியர் ஆருர்தாஸ். இந்த படம் தொடர்பாக அவர் சிவாஜியிடம் பேசியபோது ‘எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆக்கு நாகி ரெட்டி என்ன சம்பளம் கொடுத்தாரோ அதே சம்பளத்தை சண்முகம் கேட்பான்னு நினைக்கிறேன்.. அதை நீ கொஞ்சம் பாத்துக்கோ’ என மறைமுகமாக சொல்லியிருக்கிறார் சிவாஜி.
இதை தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஆருர்தாஸ் ‘தம்பி கேட்கிறாரோ இல்லையோ.. அண்ணன் கேட்கிறார் என்பதை புரிந்துகொண்டு சிவாஜி சொன்னதை அப்படியே நாகி ரெட்டியும் கூறினேன் என அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வாணி ராணி திரைப்படம் சிவாஜி, முத்துராமன், வாணிஸ்ரீ ஆகியோர் நடித்து 1974ம் வருடம் வெளிவந்தது. இந்த படத்தை சிவி ராஜேந்திரன் இயக்கியிருந்தார்.