விஜய் நடித்து 200 நாட்களுக்கும் மேல் ஓடிய டாப் 5 திரைப்படங்கள்!.. அடிச்சி தூக்கிய கில்லி!...

Vijay 200 movies: 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் விஜய். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை. எனவே, கவர்ச்சியை கையில் எடுத்தார் எஸ்.ஏ.சி. அப்படி வெளியான ரசிகன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனாலும், விஜயை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. தொடர்ந்து அப்பாவின் இயக்கத்தில் மட்டும் நடித்து வந்தார்.
ஒருவழியாக பூவே உனக்காக வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் விஜய் நடிக்க படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் விஜயின் கிராப் மேலே போய்க்கொண்டே இருந்தது. ஓரிரு படங்கள் சறுக்கினாலும் அடுத்த படத்தில் ஹிட் கொடுத்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விஜய் மாறினார். இப்போது 225 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்து 200 நாட்களுக்கும் மேல் ஓடிய திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.

விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம்தான் விஜயின் கெரியரை மாற்றியது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே விஜயை வைத்து படமெடுக்க மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முன்வந்தனர். ஒரு தலை காதலை அடிப்படையாக வைத்து ஃபீல் குட் மூவியாக இப்படத்தை இயக்கியிருந்தார் விக்ரமன். இந்த படம் 250 நாட்களுக்கும் மேல் ஓடியது.
தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் கில்லி. இந்த படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வித்யாசாகர் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடிக்க படமும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூல் செய்த படம் இதுதான். இந்த படம் 200 நாட்கள் ஓடியது. அதோடு, போன வருடம் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அடுத்து மலையாள பட இயக்குனர் பஹ்த் பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, ஸ்ரீவித்யா, சிவக்குமார், ராதாரவி, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான காதலுக்கு மரியாதை படம் விஜய்க்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் நிறைய காதலர்களை அழவைத்தது. விஜய்க்கு இந்த படமும் 200 நாட்கள் தாண்டி ஓடிய படமாக அமைந்தது.
அதேபோல், பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படமும் விஜய்க்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. கிராமத்திலிருந்து தங்கைக்காக சென்னை வரும் விஜய் ரவுடிகளை ஒழித்துக்கட்டுவதான் படத்தின் கதை. இந்த படமும் 200 நாட்கள் ஓடியது. மேலும், பிரபுதேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி படமும் விஜய்க்கு ஹிட் அடித்தது. அசின், பிரகாஷ் ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் 208 நாட்கள் ஓடியது.