எம்ஜிஆர் ஹீரோ, நான் ஹீரோயின்... அவரு வரும்போது நான் ஏன் எழும்பணும்? ஜெயலலிதா கேட்ட கேள்வி

by Sankaran |   ( Updated:2025-02-28 09:25:36  )
mgr, jayalalitha
X

தமிழ் சினிமா உலகிலும், அரசியலிலும் ஒரு தனி ஆளுமையாகத் திகழ்ந்தவர்தான் ஜெயலலிதா. அவர் ஆளுமையாகத் திகழ்ந்தவர் என்றால் அதனுடைய விதை இளமைக்காலத்திலேயே போடப்பட்டது என்பதுதான் உண்மை. அதை விளக்கும் வகையில் ஒரு சம்பவத்தைப் பார்ப்போமா...

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு தளம். எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்திற்குள்ளே அடி எடுத்து வைக்கிறார்னா அந்த இடமே பரபரப்புக்குள்ளாகி விடும். அங்கு இருக்கும் எல்லோரும் எழுந்து நிற்பார்கள். ஜெயலலிதாவைப் பொருத்தவரை அதுதான் அவருக்கு முதல் படம்.

எம்ஜிஆர் வாராரும்மா: அதனால் அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லையே என நினைத்த அந்தப் படத்தின் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, குழந்தை எம்ஜிஆர் வாராரும்மா. கொஞ்சம் எழுந்து நில்லுன்னு ஜெயலலிதாவின் காதைக் கடித்தார்.

பிஆர்.பந்துலு மீதுள்ள மரியாதை காரணமாகவும், அவரது வயது காரணமாகவும் அவர் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொண்டவர்தான் ஜெயலலிதா. ஆனால் தான் எழுந்து நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


நான் ஏன் எழும்பனும்?: அவரு வரும்போது நான் ஏன் எழுந்து நிற்கணும்? அவரு இந்தப் படத்துல கதாநாயகன். நான் இந்தப் படத்துல கதாநாயகி. ரெண்டு பேரோட அந்தஸ்தும் வெவ்வேறாக இருந்தாலும் நாங்க இரண்டு பேரும் இந்தப் படத்துல நடிகர்கள்தானே. கிட்ட வரட்டும். அப்போது வேண்டுமானால் நான் எழுந்து வணக்கம் சொல்கிறேன் என்று பிஆர்.பந்துலுவின் காதோடு சொன்னார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் ஆளுமை: எம்ஜிஆரோட படப்பிடிப்புத் தளத்தைப் பொருத்தவரையில் அவருக்குத் தெரியாத ரகசியமே அங்கு இருக்காது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதனால ஜெயலலிதா இப்படி சொன்ன விஷயமும் எம்ஜிஆரின் காதுக்குப் போனது. அநேகமாக நாளைக்கு இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாநாயகியாக இருக்க மாட்டார் என்றுதான் அங்கிருந்த எல்லாருமே நினைத்தார்கள்.

எம்ஜிஆரைக் கவர்ந்தது: ஆனால் எம்ஜிஆரைப் பொருத்தவரைக்கும் ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையும், அந்த உறுதியும் அவரைப் பெரிதாகக் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா ஒரு கட்டத்தில் உருவானார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவருடைய அந்தத் தனித்தன்மைதான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Next Story