பருத்தி வீரனை நான் எடுத்துருக்கவே கூடாது!.. இயக்குனர் அமீர் வேதனை!...

by Murugan |
paruthiveeran
X

ParuthiVeeran: தமிழ் சினிமாவில் ஏற்கனவே சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்பட்டவர் அமீர். இயக்குனர் பாலாவின் நண்பரான இவர் சேது, நந்தா போன்ற படங்ளில் வேலை செய்தார். நந்தா படம் உருவானபோது எப்படி நடிக்க வேண்டும் என புரியாமல் இருந்த சூர்யாவுக்கு நடிப்பை சொல்லி கொடுத்தவர் அமீர்தான்.

அப்படித்தான் சிவக்குமார் குடும்பத்துடன் நெருக்கமானார். தான் முதலில் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் கொஞ்சம் பக்குவப்பட்ட நடிகராகவே சூர்யா நடித்திருந்தார். நடித்தார் என்பதை விட அமீர் அப்படி அவரை நடிக்க வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.


மௌனம் பேசியதே: படத்தை பார்த்துவிட்டு ‘இப்போதுதான் அண்ணா ஒரு நடிகராகவே மாறியிருக்கிறார். உங்களுக்கு நன்றி’ என சூர்யாவின் தங்கையே அமீரிடம் சொன்னார். அதன்பின் அமீர் இயக்கிய திரைப்படம்தான் பருத்தி வீரன். இந்த படத்தில் சூர்யாவே ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. ஆனால், நடிப்பதில் ஆர்வமாக இருந்த கார்த்தியே இந்த படத்தில் நடிக்கட்டும் என விட்டுக்கொடுத்தார் சூர்யா.

பருத்தி வீரன்: அப்படி உருவான பருத்திவீரன் திரைப்படம் தமிழ் சினிமாவிலேயே ஒரு முக்கிய படமாக அமைந்ததோடு கார்த்திக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது. இந்த படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், இந்த படம் அமீருக்கு கசப்பான அனுபவத்தையே கொடுத்தது.

ஞானவேல் ராஜா செய்த மோசடி: ஒருகட்டத்தில் படத்தின் பட்ஜெட்டை காரணம் காட்டி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்திலிருந்து விலகிவிட அமீர் 1.15 கோடி வரை கடன் வாங்கி செலவு செய்து படத்தை முடித்தார். ஆனால், படம் முடிந்தபின் ‘இந்த படத்தை எனக்கு எழுதி கொடுங்கள். நீங்கள் செய்த செலவை திருப்பி கொடுத்துவிடுகிறேன்’ என சொல்லி தயாரிப்பாளர் சங்கம் மூலம் அமீருக்கு அழுத்தம் கொடுத்த அந்த படத்தை தன் பேருக்கு எழுதி வாங்கிக்கொண்டார் ஞானவேல் ராஜா. ஆனால், கூறியபடி அந்த பணத்தை ஞானவேல் ராஜா அமீருக்கு கொடுக்கவில்லை.


தயாரிப்பாளர் சங்கம், நீதிமன்றம் என புகார் கொடுத்து பல வருடங்களாக அமீர் போராடியும் எதுவும் நடக்கவில்லை. கோபத்தில் என்ன நடந்தது என ஊடகங்களில் பேச ஆரம்பித்தார் அமீர். இதுபற்றி விளக்கமளித்த ஞானவேல் ராஜா அமீரை ‘திருடன்’ என்றெல்லாம் பேச பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் ஞானவேல் ராஜாவை கண்டித்தனர். அதன்பின் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அமீர் ‘நானும் கார்த்தியும் துபாய்க்கும். சைப்ரஸ் தீவுக்கும் போயிருந்த போது சிரிச்சி சிரிச்சி நேரம் செலவழித்த சந்தோஷமான தருணங்களை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். அதை இப்போது பார்த்தால் அடுத்த நிமிஷம் என் கார் சிவக்குமார் சாரின் வீட்டு வாசலில் போய் நிற்கும். நடுவில் இருந்தவங்க எங்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்திவிட்டார்கள். எனக்கு ஒண்ணு மட்டும் தோணுது. நான் பருத்திவீரன் படத்தை எடுத்திருக்கவே கூடாது’ என சொல்லி இருக்கிறார்.

Next Story