செந்தில் சீட்டு விளையாடுவான்!.. கவுண்டமணி ரொம்ப சின்சியர்!.. பிளாஷ்பேக் சொல்லும் பாக்கியராஜ்!..

by Murugan |
bhagyaraj
X

Goundamani: 80களில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர்தான் கவுண்டமணி. துவக்கத்தில் பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகத்தில் வில்லன் உள்ளிட்ட வேடங்களிலும் கலக்கியிருக்கிறார். பாக்கியராஜும், இவரும் ஒரே அறையில் தங்கி சினிமா வாய்ப்பு தேடினார்கள்.

முதல் வாய்ப்பு: பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டார். ஆனால், கவுண்டமணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் பாரதிராஜா பதினாறு வயதினிலே படத்தை துவங்கினார். அந்த படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவராக கவுண்டமணியை நடிக்க வைக்க நினைத்தார் பாக்கியராஜ்.


முக்கிய வேடம்: ஆனால், பாரதிராஜாவுக்கோ அதில் விருப்பமில்லை. ஆனால், வற்புறுத்தி கவுண்டமணிக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தார் பாக்கியராஜ். அடுத்து பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தை இயக்கியபோது ராதிகாவின் அக்கா கணவர் வேடத்தில் நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டது. அந்த வேடத்தில் டெல்லி கணேஷை நடிக்க வைப்பதே பாரதிராஜாவின் எண்ணமாக இருந்தது.

அது படம் முழுக்க வரும் வேடம். அந்த வேடத்தையும் கவுண்டமணிக்கு வாங்கி தர நினைத்த பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் பேசி சம்மதிக்க வைத்தார். அதன்பின் பல படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார் கவுண்டமணி. 90களில் கவுண்டமணி உச்சத்தில் இருந்தார். ஹீரோக்களின் சம்பளத்தை விட அதிக சம்பளம் வாங்கினார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.


ஒத்த ஓட்டு முத்தையா: பல படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்தார். கவுண்டமணிக்கு ஜோடி, ஃபைட் என ஹீரோ செய்யும் எல்லா வேலையையும் இவர் செய்தார். கவுண்டமணி இருந்தாலே படம் பார்க்க போகலாம் என்கிற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். இப்போது அவருக்கு 85 வயது ஆகிறது. விரைவில் அவரின் நடிப்பில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியாகவுள்ளது.

பாக்கியராஜ்: இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ் ‘பொதுவாக மூன்று யுகங்கள் இருக்கிறது என சொல்வார்கள். அப்படி ‘கவுண்டமணி யுகம்’ என ஒன்று சொல்லலாம். செந்தில் படப்பிடிப்புக்கு வரும்போதே பாய், சீட்டுக்கட்டு எல்லாம் எடுத்து வருவான். வந்த உடனே 4 பேரை சேர்த்துக்கொண்டு சீட்டு விளையாடி கொண்டிருப்பான். ‘ஏன்டா இப்படி பண்றே?’ன்னு கேட்பேன். பழகிப்போச்சிண்ணே’ என சொல்வான். ஆனால், கவுண்டமணி அப்படி இல்லை. வேலையில் மிகவும் சின்சியராக இருப்பார். காலையில் வந்தவுடன் தனக்கு என்ன காட்சி, என்ன வசனம் என கேட்டு தெரிந்துகொள்வார். அவரின் ஒத்த ஓட்டு முத்தையா வெற்றி பெற என் வாழ்த்துக்கள்’ என பேசினார்.

Next Story