நீங்கலாம் ஏன்டா சினிமாவுக்கு வறீங்க?.. பார்த்திபனை அடிக்கப்போன இயக்குனர்!...

by Murugan |   ( Updated:2025-03-02 13:13:27  )
parthiban
X

Parthiban: புதிய பாதை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டவர் இவர். இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் ஒரு கதையை எழுதி பல நடிகர்களையும் சந்தித்து கதை சொன்னார்.

யாரும் ஆர்வம் காட்டவில்லை. ரஜினி, கமலை சந்தித்து கூட கதை சொன்னார். ரஜினிதான் பார்த்திபன் கூட்டிவந்த தயாரிப்பாளரிடம் ‘பார்த்திபனையே ஹீரோவாக போட்டு இந்த படத்தை எடுங்கள்’ என சொன்னார். அப்படித்தான் புதிய பாதை உருவானது. ஆனால், இந்த படத்தை எடுக்கும்போது பல வகைகளிலும் பார்த்திபனுக்கு பிரச்சனை வந்தது.

தயாரிப்பாளரை பலரும் குழப்பிவிட அடிக்கடி படப்பிடிப்பை நிறுத்திவிடுவாராம். அதன்பின், பார்த்திபன் அவரை சமாதானம் செய்து படப்பிடிப்பை நடத்துவாராம். இப்படித்தான் புதிய பாதை படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அப்படி வெளியான புதிய பாதை சூப்பர் ஹிட் அடித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.


அதன்பின் தொடர்ந்து பல படங்களையும் அவரே இயக்கி நடித்தார். பார்த்திபன் எதையும் வித்தியாசமாக யோசிப்பவர். படத்தின் தலைப்பு முதல் படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் வரை எல்லாவற்றையும் வித்தியாசமாகவே யோசிப்பார். மேடைகளில் பேசினாலும் வித்தியாசமாகவே பேசுவார்.

பார்த்திபனின் பேச்சுக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. குடைக்குள் மழை, இரவின் நிழல், ஒத்த செருப்பு என வித்தியாசமான கதைகளை இயக்கியவர் இவர். ஒருபக்கம், தொடர்ந்து பல வேடங்களிலும் நடித்தும் வருகிறார். நானும் ரவுடிதான் படத்தில் இவர் ஏற்ற வேடம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘பார்வையின் மறுபக்கம் என்கிற ஒரு படத்தில் எனக்கு வக்கீல் வேடம். சின்ன வசனமும் இருந்தது. நான் நடித்து முடித்ததும் ‘ஏன்டா நீங்கலாம் சினிமாவுக்கு வந்து தாலியறுக்குறீங்க. ஒரு டயலாக் பேசத்தெரியல’ என இயக்குனர் என்னை அடிக்குமளவுக்கு வந்துவிட்டார். அருகில் இருந்த ஸ்ரீபிரியா ‘அவர் சரியாதான் பேசினார். வேணும்னா திரும்ப போட்டு கேட்கலாம் என சொன்னார். நான் சரியாக அந்த வசனத்தை பேசியிருந்தேன். எல்லோரும் கைத்தட்டினார்கள். இயக்குனர் முகம் மாறி எனக்கு மேலும் சில வசனங்களை கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார்.

பார்வையின் மறுபக்கம் படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார். கதாசிரியர் கலைஞானம் இப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 1982ம் வருடம் வெளிவந்தது.

Next Story