விஜயகாந்த் படத்தில் நான் செய்த தவறு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்!..
Vijayakanth: விஜயகாந்த் படங்கள் என்றாலே அவரின் படங்களில் இடம் பெறும் அதிரடி வசனங்களும், சண்டை காட்சிகளும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். விஜயகாந்தும் அதைத்தான் விரும்பினார். சினிமாவில் நடிக்க துவங்கியபோது அவரின் படங்களில் அதிக சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
ஆக்சன் ஹீரோ: எம்.ஜி.ஆர் பாணியில் ஏழை மக்களுக்கு குரல் கொடுப்பது, அநியாயத்தை தட்டி கேட்பது, போலீசே தவறு செய்தாலும் அவர்களை அடித்து நொறுக்குவது என தனது படங்களில் காட்சிகளை வைத்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்ததில் 80 சதவீத படங்கள் ஆக்ஷன் படங்கள்தான். விஜயகாந்த் ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள்.
ஆனால், சுந்தர்ராஜன், விக்ரமன், ஆர்.வி.உதயகுமார் போன்ற சில இயக்குனர்கள் விஜயகாந்தை வேறு மாதிரியும் காட்டியிருக்கிறார்கள். அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த நேரத்தில் விஜயகாந்தை வைதேகி காத்திருந்தாள் படத்தில் வேறு மாதிரி காட்டினார் சுந்தர் ராஜன். அதை தொடர்ந்து அவ்வப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் விஜயகாந்த் நடிக்க துவங்கினார்.
வானத்தை போல: ஊமை விழிகள், செந்தூரப்பூவே, சின்னக் கவுண்டர், என் ஆசை மச்சான் போன்ற பல படங்களிலும் விஜயகாந்த் அப்படி நடித்திருக்கிறார். அந்த வரிசையில் விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் வானத்தை போல. இந்த படத்தில் தம்பிகளுக்காகவே வாழும் அண்ணன் வேடத்திலும், தம்பிகளில் ஒருவராகவும் இரட்டை வேடத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். மேலும், லிவிங்ஸ்டன், பிரபுதேவா, மீனா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
அண்ணன் தம்பி செண்டிமெண்ட்: 2000ம் வருடம் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் அண்ணன் - தம்பி உறவுக்கான பல செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் சண்டை காட்சிகளை வைப்பதில் விக்ரமனுக்கு உடன்பாடே இல்லை. ஆனால், விஜயகாந்த் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சண்டைக்காட்சியை வைத்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விக்ரமன் ‘வானத்தை போல படத்தில் நான் தப்பு பண்ணிட்டேன். ஏன்னா தம்பி விஜயகாந்துக்கு கொஞ்சம் ஹீரோயிசம் இருக்க மாதிரி காட்சிகளை நான் வச்சிருக்கணும். படத்தோட டப்பிங்கின் போதுதான் எனக்கு அது தோணுச்சி. ஆனா, ரீஷூட் பண்ண எனக்கு விருப்பமே இல்லை. அதனால் அப்படியே விட்டுட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.