கமல் படத்துக்கு மியூசிக் போட மறுத்த இளையராஜா... அப்புறம் எப்படி வந்துச்சு அந்த சூப்பர்ஹிட் பாட்டு?

by Sankaran |   ( Updated:2025-01-05 10:35:46  )
kamal ilaiyaraja
X

கமலும், இளையராஜாவும் நல்ல நண்பர்கள். கமலின் பெரும்பாலான படங்களுக்குப் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜாதான். அப்படி இருந்தும் கமலின் ஒரு படத்துக்கு இளையராஜா இசை அமைக்க மறுத்தாராம். அட ஆச்சரியமாக இருக்கிறதா? வாங்க என்னன்னு பார்ப்போம்.

2004ல் கமல் தயாரித்து இயக்கி நடித்து வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் விருமான்டி. தூக்குத்தண்டனை தேவையா இல்லையா என்பதைப் பற்றி அலசும் படம்.

கமல் உடன் இணைந்து அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகிணி உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை தென்மாவட்ட ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். மதுரையில் நடக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்தப் படத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும்.

இந்தப் படத்தில் முதலில் இளையராஜா இசை அமைக்க மறுத்து விட்டாராம். ஏன்னா கமல் கதை சொன்ன போது 'என்ன இது ஒரே வெட்டும், குத்துமா இருக்கு. இந்தப் படத்துக்கு எல்லாம் என்னால இசை அமைக்க முடியாது'ன்னு சொல்லி அனுப்பி விட்டாராம். அப்புறம் கமல் தன் குழுவினரிடம் இளையராஜா சொன்னது குறித்து தெரிவித்துள்ளார்.

unna vida song

அதற்கு அவர்கள் 'நீங்கள் ஏன் வெட்டு குத்து சம்பந்தமான காட்சிகளைப் பற்றி மட்டும் அவரிடம் சொன்னீர்கள்? அதையும் தாண்டி இருக்குற காட்சிகளை சொல்லி இருக்கலாமே'ன்னு ஆலோசனை கூறினார்களாம். உடனே அவர்களது ஆலோசனைப்படி மறுநாள் கமல் சென்று அப்படிப்பட்ட காட்சிகளை விவரித்துள்ளார்.

குறிப்பாக கமல், அபிராமி காதலின் உச்சக்கட்டமான உன்ன விட பாடலுக்கான சிச்சுவேஷனை சொல்லி இருக்கிறார். இந்தக் காட்சியைப் பற்றிக் கேட்டதும் இளையராஜா இசை அமைக்க சம்மதித்ததோடு இந்தப் பாடலுக்கான முதல் வரியையும் சொல்லி விட்டாராம்.

அப்படின்னா பாடலை யாரை வைத்து எழுதுவதுன்னு யோசிக்கையில் 'நீயே எழுது'ன்னு இளையராஜா கமலிடம் சொல்லி இருக்கிறார். அப்படி கமல் எழுதி அவரே பாடி உருவானதுதான் 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல...' என்ற அந்த சூப்பர்ஹிட் காதல் மெலடி பாடல். அப்படித் தான் அந்தப் படத்திற்கும் பின்னணி இசை அமைக்க இளையராஜா சம்மதித்தாராம்.

இந்தப் படத்துக்கு ஒரு ஸ்பெஷல் உண்டு. அது என்னன்னா புதுமையான திரைக்கதை. அதாவது படத்தில் ஒரே காட்சியை ஹீரோவின் கண்ணோட்டத்திலும், வில்லனின் கண்ணோட்டத்திலும் காட்டப்படும். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் புதுமையான விருந்தைப் படைத்தது என்றே சொல்லலாம்.

Next Story