திருக்குறளில் இருந்து கமலுக்கு டியூன் போட்ட இளையராஜா... இப்படி எல்லாமா நடந்தது?
இசைஞானி இளையராஜாவை ரசிகர்கள் இசைக் கடவுள் என்று கொண்டாடுகின்றனர். சமீபத்தில் நெல்லையில் நடந்த அவரது இசைக்கச்சேரியில் ரசிகர்கள் பலரும் அவரது பாடல்களுக்கு உற்சாகமான நடனம் ஆடினர்.
இசைக்கடவுள்: ஒரு சிலர் இசைக்கடவுள் என்று இளையராஜாவின் புகைப்படம் ஏந்தி தங்களது பரவசத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இளையராஜா கச்சேரி எங்கு நடந்தாலும் சென்று விடுவார்களாம். அந்த வகையில் ரசிகர்களுக்கு இளையராஜா ஒரு உன்னதமான நபராகத் தென்படுகிறார் என்றே சொல்ல வேண்டும்.
பேர் வச்சாலும்..: பாடல்களுக்கு இடையே இவர் சொல்லும் விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடல் போடப்பட்டது. அப்போது அந்தப் பாடலைப் பற்றி இளையராஜா இப்படி சொன்னார்.
குறளுக்கு டியூன்: இந்தப் பாடல் கம்போஸ் நடக்கும்போது கமலுக்குத் 'துப்பார்க்குத் துப்பாய' என்ற அந்தக் குறளுக்கு டியூன் போட்டுக் கொடுத்தேன்.அதே மாதிரி தான் பாட்டு வேணும்னு சொன்னார். அப்படி உருவானதுதான் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடல் என்றார் இசைஞானி. அரங்கத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.
மைக்கேல் மதன காமராஜன்: 1990ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் மைக்கேல் மதன காமராஜன். கமலின் முற்றிலும் மாறுபட்ட 4 வேடங்கள் படத்தில் செம ரகளையாக இருக்கும். படம் முழுக்க முழுக்க காமெடி தான். கிரேசி மோகன் வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்திற்கு இசை இளையராஜா.
இந்தப் படத்தில்தான் பேர் வச்சாலும் பாடல் வருகிறது. மலேசியாவாசுதேவன், எஸ்.ஜானகி பாடிய பாடல் இது. மேலும் ரம்பம்பம், கதைகேளு, ஆடிப்பட்டம் தேடி, சிவராத்திரி, சுந்தரி நீயும், மத்தாப்பூ ஒரு பெண்ணா ஆகிய பாடல்களும் உள்ளன. இவற்றில் மத்தாப்பூ, ஆடிப்பட்டம் பாடல்கள் படத்தில் இடம்பெறவில்லை.
புன்னகை மன்னன்: கச்சேரியில் முக்கியமாக கமலின் பல பாடல்கள் போடப்பட்டன. குறிப்பாக புன்னகை மன்னன் படத்தின் தீம் மியூசிக்கை இளையராஜா போட்டுக் காட்டிய போது அனைவரும் பிரமிப்பில் ஆழ்ந்தனர். என்ன ஒரு இசை... அதே போல விக்ரம் படத்தில் வரும் டைட்டில் சாங்கும் போடப்பட்டது. இளையராஜா கம்ப்யூட்டர் மியூசிக் போட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அந்தப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.