அப்பா வச்ச பேரு இளையராஜா ஆனது எப்படி?!.. இசைஞானி சொன்ன செம ஃபிளாஷ்பேக்!...

by Murugan |
ilayaraja
X

Ilayaraja: சினிமாவில் பெரும்பாலானோருக்கு உண்மையான பெயர் இருக்காது. கணேசன் சிவாஜி கணேசனாகவும், சிவாஜி ராவ் ரஜினியாகவும், வெங்கடேஷ் பிரபு தனுஷாகவும், சரவணன் சூர்யாவாகவும், டயானா மரியம் குரியன் நயன்தாராவாகவும் சினிமாவில் அறிமுகமானார்கள். அவர்களின் உண்மையான பெயர் பலருக்கும் மறந்துவிடும்.

சினிமாவில் நீடிக்க வசீகரமான பெயர் முக்கியம். அதே நேரம் பெயர் அழகாகவும் இருக்க வேண்டும். சொல்வதற்கும் சுலமபாக இருக்க வேண்டும். பாரதிராஜா அறிமுகம் செய்த ராதிகா, ராதா, ரஞ்சிதா, ரேகா, ரேவதி என பலருக்கும் உண்மையான பெயர்கள் வேறு. ஆனால், அவர்கள் இப்போது வரை பாரதிராஜா வைத்த அந்த பெயரில்தான் ரசிகர்களால் அறியப்படுகிறார்கள்.


80களில் இசை ராஜா: இசைஞானி இளையராஜாவுக்கும் அது அவரின் சொந்த பெயர் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இளையராஜா. 80களில் இவரின் இசை ராஜியம்தான் கோலிவுட்டில் இருந்தது. ரஜினி, கமல், மோகன் என அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர் இவர்தான்.

இளையராஜா நமது படத்திற்கு இசையமைக்க வேண்டும் என எல்லா தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவார்கள். எனவே, அவரின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு முன் அவருக்காக காத்திருப்பார்கள். 80களில் உண்மையான ராஜாவாகவே வாழ்ந்தார் இளையராஜா. இந்நிலையில், அவருக்கு எப்படி அந்த பெயர் வந்தது என பார்ப்போம்.


அப்பா வைத்த பெயர்: ஒரு விழாவில் இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் ‘உண்மையில் எனது அப்பா எனக்கு இரண்டு பெயர்களை வைத்தார்... ஜாதகத்தை பார்த்து எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன்.. பள்ளியில் சேர்க்கும்போது சுருக்கமாக இருக்க வேண்டுமென ‘ராஜைய்யா’ என வைத்தார்.. சென்னைக்கு வந்து தன்ராஜ் மாஸ்டரிடம் இசையை கற்றுக்கொள்ளப்போனேன். அந்தகாலத்தில் எம்.எஸ்.வி. முதல் கொண்டு எல்லோருக்கும் மியூசிக் சொல்லிக் கொடுத்தது அவர்தான். அவர் என் பெயரை ராஜா என மாற்றினார். அதன்பின் அன்னக்கிளி பட வாய்ப்பு கிடைத்தபோது என் டியூனுக்காகவே பஞ்சு அருணாச்சலம் படம் எடுத்தார்.

பஞ்சு அருணாச்சலம்: அந்த படத்திற்கு முன் கோவர்த்தன் என்பவரோடு இணைந்து வரப்பிரசாதம் என்கிற படத்திற்கு இசையமைத்தோம். டைட்டிலில் கோவர்த்தன் ராஜா என போடுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த பெயரையே நான் பஞ்சு அருணாச்சலத்திடம் சொல்ல ‘இந்த படத்துக்கு நீதான் இசையமைப்பாளர். உன் பெயரை மட்டுமே போடுவேன். ஆனால், ராஜா வேண்டாம். ஏற்கனவே ஏ.எம்.ராஜா இருக்கார். குழப்பமாக இருக்கும்’ என்றார். ‘சரி பாவலர் பிரதர்ஸ் என போடலமா?’ எனக்கேட்டேன். ஏனெனில் அந்த பெயரில் இசைக்கச்சேரிகளை நான் நடத்திக்கொண்டிருந்தேன்.

‘வேணாம்யா அது ரொம்ப பழசா இருக்கு.. நீ ராஜா.. ஏற்கனவே ஒரு ராஜா இருக்கார். நீ இளையராஜா’ என வைத்துவிட்டார்.. அதுவே நிலைத்துவிட்டது’ என சொன்னார் இளையராஜா. இதில் இன்னொன்றும் இருக்கிறது. அப்பா ராஜைய்யா என வைத்தால் அவரின் அம்மா கடைசிவரை ‘ராசைய்யா’ என்றுதான் கூப்பிட்டார்.

Next Story