'ஜனனி ஜனனி' பாடல் உருவான விதம்!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு ஸ்டோரி இருக்கா?!....
Ilayaraja: இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டு விஷயத்தில் அதிக ஆர்வம் உண்டு. ஒன்று இசை.. மற்றொன்று ஆன்மிகம். இந்த இரண்டையும் கலந்து பல அற்புதமான பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார். அவர் இசையமைத்த எல்லா பக்தி பாடல்களுமே காலத்தால் மறக்க முடியாதவைதான். அதில் முக்கியமானது தாய் மூகாம்பிகை படத்தில் அவர் இசையமைத்த ஜனனி.. ஜனனி பாடல்.
ஜனனி ஜனனி: இப்போதும் எங்கு இசைக்கச்சேரி நடந்தாலும் இளையராஜா இந்த பாடலைத்தான் முதலில் பாடி நிகழ்ச்சியை துவங்குவார். அந்த அளவுக்கு அவரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல் இது. இந்த படல் எப்படி உருவானது என்பது பற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் விரிவாக பேசியிருக்கிறார். அதுபற்றி பார்ப்போம்.
தாய் மூகாம்பிகை படத்தில் ஒரு சூழ்நிலைக்கு பாடல் வேண்டும் என என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆனால், நான் பல பட வேலைகளில் இருந்ததால் அந்த படத்திற்கு கம்போசிங் உட்கார முடியவில்லை. அடுத்த நாள் பூஜை என்பதால் ஒரு பாடல் உடனே வேண்டும் என இயக்குனர் கேட்டதால் அவரை இரவு 10 மணிக்கு என் வீட்டிற்கு வர சொன்னேன்.
9 மணிக்கு வீட்டுக்கு போன நான் குளித்துவிட்டு பிராத்தனை செய்தேன். ஆதிசங்கரர் மூகாம்பிகை கடவுளை நினைத்து மனம் உருகி பாடும் பாடல் என ஏற்கனவே எனக்கு சொல்லி இருந்தார்கள். ஆதிசங்கரனின் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாகி மகா காளி, மகா சரஸ்வதி, மகா லட்சுமி முவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு காட்சி வருவது போலவும் அதை அவர் பிரதிஷ்டை செய்வது போலவும் காட்சி. அப்போது அவர் பாடும் பாடல் என சொன்னார்கள்.
பூஜையை முடித்து நான் எழுந்து செல்லும்போது என் பூஜையில் இருந்த ஆதி சங்கரர் புகைப்படத்தை பார்த்து ‘இந்த பாட்டுல நீங்க இருக்கீங்க’ என சொல்லிவிட்டு போனேன். பாடல் கம்போஸ் செய்து வாலியும் பாடலை எழுதி முடித்து, அடுத்த நாள் காலை யேசுதாஸை வரவைத்து ரிக்கார்டிங் செய்வது என எல்லாம் முடிவானது.
அதன்பின் நான் எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றபோது ‘இந்த பாடல் எப்படி இருக்கிறது?’ என யோசித்தேன். ஒரு சங்கீதவித்வான் பாடுவது போல இருந்தது அந்த பாடல். ‘ஆதிசங்கரர் ஒரு பக்தர்.. அவர் எப்படி ஒரு சங்கீத வித்வான் போல பாடுவார்?’ என யோசித்தேன். உடனே சென்று ‘இந்த பாடல் வேண்டாம்.. வேறு ஒரு பாடல் போடுகிறேன்’ என சொல்லி நான் இசையமைத்ததுதான் ஜனனி. ஜனனி பாடல். இந்த பாடலை கேட்டு இயக்குனர், உதவி இயக்குனர் என எல்லோரும் கண்ணீர் விட்டார்கள்’ என இளையராஜா சொல்லியிருக்கிறார்.