அவனுக்கு ரீரிக்கார்டிங் பண்ண தெரியாது!.. குரு அடித்த கமெண்ட்!.. இளையராஜா எடுத்த அந்த முடிவு!...

இளையராஜா: சினிமா இசையமைப்பாளர்கள் இரண்டு பணிகளை செய்வார்கள். ஒன்று பாடல்களை உருவாக்குவது, மற்றொன்று பின்னணி இசை அமைப்பது. பாடல்களை கூட சிலர் செய்து விடுவார்கள். ஆனால், பின்னணி இசை சுலபம் இல்லை. அதனால்தான். பல படங்களில்பாடலுக்கு ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசைக்கு மற்றொரு இசையமைப்பாளரும் வேலை செய்வார்கள்.
பொங்கல் ரிலீஸ்: சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான சில படங்களில் கூட இரண்டு இசையமைப்பாளர்கள் வேலை பார்த்திருந்தார்கள். பின்னணி இசை என்பது ஒரு காட்சியில் கதாபாத்திரம் என்ன மனநிலையில் இருக்கிறதோ, அங்கு என்ன நடக்கிறதோ அதை புரிந்துகொண்டு அதற்கு இசையமைக்க வேண்டும்.
பின்னணி இசை: சரியாக சொல்லவேண்டுமென்றால் அந்த காட்சியில் இயக்குனர் ரசிகர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து அதற்கேற்ப இசையை கொடுக்க வேண்டும். காதல், ரொமான்ஸ், காமெடி, சோகம், விரக்தி, அழுகை, சந்தோஷம், உற்சாகம், வெற்றி என பல உணர்வுகளை கதாபாத்திரங்கள் திரையில் காட்டும். அதையெல்லாம் புரிந்துகொண்டு இசையமைக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் காட்சிகளோடு வரும் பின்னணி இசைதான் ரசிகர்களை அந்த காட்சியோடு ஒன்ற வைக்கும்.
இதை தமிழ் சினிமாவில், ஏன்? இந்திய சினிமாவிலேயே சிறப்பாக செய்தவர் இளையராஜா மட்டுமே. ஒரு இயக்குனர் அந்த காட்சியில் சொல்ல விரும்புவதை பல மடங்கு தனது பின்னணி இசை மூலம் சொல்லிவிடுவார். இயக்குனரால் சொல்ல முடியாததையும் அவர் இசை மூலம் ரசிகர்களுக்கு கடத்தி விடுவார்.
அதனால்தான் ‘நான் படமெடுத்துவிட்டேன்.. மிச்சத்தை ராஜா பார்த்துக்கொள்வார்’ என நம்பி பெரிய பெரிய இயக்குனர்களே அவரிடம் போனார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இளையராஜா ‘நான் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்தேன். அன்னக்கிளி படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதும் அந்த படத்தின் கதாசிரியர் செல்வராஜ் ஜி.கே.வெங்கடேஷிடம் சென்று ‘ராஜா சூப்பரா பண்ணிட்டார்.. பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்’ என சொன்னார்.
ஜி.கே. வெங்கடேஷ்: அவரோ ‘அவன் பாட்டுலாம் நல்லா போடுவான்யா.. ஆனா அவனுக்கு ரீரிக்கார்டிங் பண்ண தெரியாது’ என சொன்னார். அவர் இசையமைத்த படங்களில் அவரின் உதவியாளராக பின்னணி இசைக்கான வேலைகளை நான்தான் செய்தேன். என்னை ஏன் இப்படி சொல்லுகிறார்’ என யோசித்தேன். அப்போதுதான் ‘எனக்கு உதவியாளரே இருக்கக் கூடாது என முடிவெடுத்தேன். என் பாட்டை கேட்டு துப்பினாலும் என்னை துப்பட்டும். பாராட்டினாலும் அது எனக்கே’ என முடிவெடுத்தேன்’ என சொல்லியிருக்கிறார்.