சைக்கிளில் வந்த சிவகுமாருக்கு ஜெய்சங்கர் கொடுத்த உற்சாகம்... இதுக்கெல்லாம் வருத்தப்படாதே!
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அறிமுகமான காலகட்டத்தில் எப்படிப்பட்ட கலைஞராக இருந்தார் என்பதை சிவகுமார் ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
1960களில்தான் ஒரு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவிஎம்.ராஜன், ஸ்ரீகாந்த், நான் ஆகிய 5 பேரும் கதாநாயகர்களாக அறிமுகமானோம். இதுல தொடர்ந்து படங்கள் நடிக்கக்கூடிய வாய்ப்புன்னா அது ஜெய்சங்கருக்குத்தான் கிடைத்தது.
தயாரிப்பாளர், லைட்மேன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காத ஒரு நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். அனைவரின் தோள்மீதும் கைபோட்டு சர்வசாதாரணமாக அவர் பேசுவார். அதேமாதிரி மற்றவர்களைக் காயப்படுத்துகிற மாதிரியான வார்த்தை எதுவும் அவரது வாயில் இருந்து வராது. எனக்கு தெரிஞ்சி சினிமா உலகிலே எதிரிகளே இல்லாமல் இருந்த நடிகர்னா நான் ஜெய்சங்கரைச் சொல்வேன்.
பல தருணங்களில் எனக்கு ஆதரவாக ஜெய்சங்கர் இருந்திருக்கிறார். நான் தொடர்ந்து பல போராட்டங்களை சந்தித்து வந்த அந்தக் காலகட்டத்தில் நடிகர் சங்க வளாகத்தில் டென்னிஸ் ஆடுவதற்காக பல முக்கியமான கதாநாயகர்கள் எல்லாம் வருவாங்க.
அப்போது ஜெய்சங்கரும் தனது காரில் வருவார். நான் அப்போ என்னுடைய சைக்கிள்ல நடிகர் சங்க வளாகத்துக்குப் போவேன். அப்போது எனது வசதி அப்படி. எனது முகத்தில் இருந்த மாற்றத்தைப் பார்த்த ஜெய்சங்கர் 'ஏன் சிவா வாட்டமா இருக்கே, சினிமா உலகிலே வெற்றி, தோல்வி என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது.
உனக்கு ஒரே ஒரு நல்ல வாய்ப்பு வந்தா போதும். உன்னுடைய வாழ்க்கையே தலைகீழா மாறிடும். அதனால இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காதே'ன்னு ஆறுதல் சொன்னார் ஜெய்சங்கர். மிகுந்த மன வருத்த்தில் இருந்த எனக்கு அந்தளவுக்கு தைரியத்தைத் தந்தன என்கிறார் சிவகுமார்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.வசதியில்லாமல் சைக்கிளில் வந்த சிவகுமாரைப் பார்த்து நக்கல் பண்ணாமல், அவரது மனவேதனையை அவரது முகத்தில் குறிப்பால் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப பக்குவமாகப் பேசி உள்ளார் ஜெய்சங்கர். அதுமட்டுமல்லாமல் அவருடைய மனவேதனைக்கு மாமருந்தாக அமைந்து ஒரு நல்ல தைரியத்தைக் கொடுத்துள்ளது ஜெய்சங்கரின் பேச்சு.