தயாரிப்பாளர் மீது மண்ணை வாரி தூற்றிய சரோஜாதேவி அம்மா.. ஹோட்டலில் நடந்த களேபரம்
கன்னடத்து பைங்கிளி: கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி. இவர் தமிழில் நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். இவர் சினிமாவில் அறிமுகமானது கன்னட திரைப்படத்தின் மூலம் தான். எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் சரோஜாதேவி. எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைப்போல சிவாஜி கணேசன் உடன் 22 படங்களில் நடித்திருக்கிறார்.
முப்பெரும் தேவிகள்: அது மட்டுமல்ல ஜெமினிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ரவிச்சந்திரன் ,ஏவிஎம் ராஜன் என அப்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சரோஜாதேவி. எப்படி நடிகர்களில் எம்ஜிஆர் ,சிவாஜி, ஜெமினி கணேசன் என மூவேந்தர்களாக சினிமாவை ஆண்டு வந்தார்களோ அதைப்போல 60, 70 காலகட்டத்தில் பத்மினி, சாவித்திரி ,சரோஜாதேவி என முப்பெரும் தேதிகளாக சினிமாவில் ராஜ்ஜியம் நடத்தி வந்தார்கள்.
ஜெயலலிதாவின் வருகை: அதன் பிறகு தான் கே ஆர் விஜயா, ஜெயலலிதா அவர்களின் வருகை சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்த சரோஜாதேவி மூன்று தலைமுறை நடிகர்களை கண்டவர். விஜய் ,சூர்யா என இவர்களின் படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறார். நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்றாலும் 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இவருடைய இயற்பெயர் ராதா தேவி. சினிமாவிற்காக தன்னுடைய பெயரை சரோஜாதேவி என மாற்றிக் கொண்டார்.
ஆரம்பத்தில் பட்ட கஷ்டம்: இவர் கதாநாயகியாக அறிமுகமான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது .முதல் படமே மிகப்பெரிய அளவில் புகழை கொடுத்தது. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக விளங்கினார் சரோஜாதேவி. இந்த நிலையில் தமிழில் அறிமுகமாவதற்கு முன் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த சரோஜாதேவி ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கினார்.
அப்படி வந்த வாய்ப்பு தான் தமிழில் வெளியான கோகிலா வாணி திரைப்படத்தின் ஒரிஜினல் கன்னட படம். கோகிலாவாணி கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சரோஜாதேவி. அப்போது அவருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். அதற்கு அட்வான்ஸ் தொகையாக 101 கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர் சம்பளமே தரவில்லையாம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஏ நடராஜன். அந்த படத்தை தமிழில் இயக்கியவரும் தயாரித்தவரும் எஸ் ஏ நடராஜன் தான்.
சென்னையில் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் எஸ்.ஏ. நடராஜன் தங்கி இருந்த பொழுது சம்பளத்தை வாங்குவதற்காக சரோஜா தேவியும் அவருடன் அவர் தாயாரும் அந்த ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது சம்பளத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் எஸ்ஏ நடராஜனுக்கும் சரோஜாதேவி அம்மாவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கெட்ட வார்த்தைகளும் பேசி அந்த ஹோட்டலே களேபரம் ஆகிவிட்டதாம். அதன் பிறகு சரோஜா தேவியின் அம்மா தயாரிப்பாளரை நோக்கி மண்ணை வாரி இறைத்து நீ நல்லாவே இருக்க மாட்ட என சொல்லிவிட்டு வந்து விட்டார்களாம்ம் இந்த தகவலை கலைஞானம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.