3 மணி நேரம் அசையவே முடியாது!.. ஆளவந்தான் படத்திற்காக கமல் பட்ட கஷ்டங்கள்!..

ஆளவந்தான்: கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் 2001ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் ஆளவந்தான். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் இது. அந்த படம் உருவாவதற்கு பல வருடங்களுக்கு முன்பே அந்த கதையை ஒரு வார இதழில் தொடர்கதையாக கமல் எழுதியிருக்கிறார்.
ஆளவந்தான் கதை: கமலை வைத்து சத்யா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமலுக்கு இரட்டை வேடம். அதில் ஒரு கதாபாத்திரம் மனநிலை பாதிக்கப்பட்டவர். அம்மாவின் மீது கொண்ட அதீத அன்பால் அப்பாவின் இரண்டாவது மனைவி உள்ளிட்ட பலரையும் கொலை செய்வார்.

தனது அண்ணனின் மனைவியையும் தனது சித்தி போல நினைத்து அவரையும் கொல்ல திட்டமிடுவார். இதை மற்றொரு கமல் எப்படி தடுத்தார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்திற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து உடலை கும்மென ஏற்றினார் கமல். நந்து கதாபாத்திரத்திற்காக கடுமையான உழைப்பையும் போட்டார்.
கமலுக்கு போட்ட மேக்கப்: நந்து கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட அதிகாலை 3 மணிக்கு வருவாராம் கமல். இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு 3 மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருப்பாராம். அவரின் தலை, இரண்டு கைகள், முதுகு மற்றும் கழுத்திலிருந்து நெஞ்சு வரை டாட்டு வரைவார்களாம். அது முழுக்க ஏசி அறை. ஏனெனில், ஏசி இல்லையென்றால் அந்த மேக்கப் உருகிவிடும்.

அப்படி மேக்கப்போட்டு முடித்தபின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு 60 அடி தூரம் இருக்கும். அங்கு கமல் நடந்து செல்லவேண்டும். ஏசி இல்லாமல் வெளியே போனால் டாட்டூ கலைந்துவிடும். எனவே, 2 பேர் டேபிள் வேனை கையில் பிடித்துக்கொண்டு அவருக்கு காட்டியவாறே செல்வார்களாம்.
தவறாக வெளிவந்த செய்தி: இதைப்பார்த்த ஒரு பத்திரிக்கையாளர் ‘கமல் ஓவர் பந்தா செய்கிறார்’ என எழுதிவிட்டார். இதைப்பார்த்து கமல் வருத்தப்பட்டதாகவும் செய்தி உண்டு. அப்படியெல்லாம் கமல் நடித்து வெளியான ஆளவந்தான் ரசிகர்களை கவரவில்லை. இதனால், அப்படத்தை தயாரித்த தாணுவுக்கு நஷ்டமே ஏற்பட்டது. ‘ஆள வந்தான் என்னை அழிக்கவந்தான்’ என பேட்டியோ கொடுத்தார்.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது பலருக்கும் தெரியாது. கமல் மிகவும் குறைவான பட்ஜெட்டிலேயே இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ‘நான் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர். நல்லா செலவு பண்ணி எடுங்க’ என தாணு சொல்ல கதையில் மாற்றம் செய்திருக்கிறார் கமல். ஆனால், பாதி உருவானபின் ‘இனிமேல் என்னால் செலவு பண்ண முடியாது.. கதையை மாற்றுங்கள்’ என தாணு சொல்ல கமல் கடுப்பாகிவிட்டார். இப்படி பல பிரச்சனைகளை தாண்டியே ஆளவந்தான் படம் வெளியானது. இந்த படத்தில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை கமல் அறிமுகமும் செய்திருந்தார்.