கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு கடும் எதிர்ப்பு... கொடிபிடித்த வியாபாரிகள்
'கவியரசர்' என்று சொன்னாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கண்ணதாசன். அவர் எழுத்துக்கள் காலத்தால் அழியாதவை. அதனால்தான் இன்றும் கூட அவரது திரையுலகப் பாடல்கள் நிலைத்து நிற்கின்றன. ஆன்மிக விஷயங்களையும் அவர் போல யாராலும் சுவைபட பேச முடியாது.
அந்தக் காலத்தில் அவர் எழுதிய ஒரு புகழ்பெற்ற பாடல் வியாபாரிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. அது என்னன்னு பார்ப்போமா...
சென்னையில் புகழ்பெற்ற ஒரு இடம் மூர் மார்க்கெட். இங்கு பழைய புத்தகங்கள் நிறைய கிடைக்கும். புது புத்தகங்கள் வாங்க வசதியில்லாத மாணவர்கள் பலரும் இங்கு வந்து பழைய புத்தகங்களை வாங்கி படித்து முன்னேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
அந்த வகையில் சிறந்து விளங்கிய இந்த இடம் குறித்து கண்ணதாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். பாலசந்தர் இயக்கிய 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில் தான் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்று அந்தப் பாடலில் ஊரு கெட்டுப் போனதுக்கு மூரு மார்க்கெட் அடையாளம், நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸ் நாகரிகம் அடையாளம்னு சில வரிகள் வரும். இதைக் கேட்டதும் மூர் மார்க்கெட் வியாபாரிகள் கொதித்து எழுந்தனராம்.
உடனே பாலசந்தரிடம் எங்களை அவமானப்படுத்திட்டீங்க. உடனே வரிகளை நீக்குங்க. இல்லன்னா நடக்குறதே வேறன்னு மிரட்டல் விடுத்தார்களாம். ஆனால் பாலசந்தர் அதை எல்லாம் கண்டுக்கவே இல்லை. உடனே அவர்கள் கோர்ட்டுக்குப் போனார்கள். அங்கும் வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. கடைசியில் ஒன்றும் பண்ண முடியாமல் போனது.
கண்ணதாசன் ஏன் அப்படி வரிகளை அந்தப் பாடலில் எழுதினார் என்று முதலில் பலருக்கும் புரியவில்லை. ஆனால் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. பல காலம் கழித்து சென்னையின் அடையாளமாகத் திகழ்ந்த அந்த மூர் மார்க்கெட் 1985ல் தீ விபத்து ஏற்பட்டு இருந்த இடம் தெரியாமல் போனது.