காதலியிடம் சவால் விட்டு திருமணம் செய்த மனோபாலா.. கடைசியில் சினிமா கதையா போச்சே
அற்புத மனிதர் மனோபாலா: திருமணம் என்பது சில பேருக்கு பெரிய கனவாக இருக்கும். அதுவும் திருமண விஷயத்தில் நடக்கின்ற சில சம்பவங்கள் பல பேருக்கு சுவாரசியமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா அவருடைய திருமண அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் மனோபாலா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு இயக்குனராக மாறியவர். பாரதிராஜாவிடம் அவரை உதவி இயக்குனராக சேர்த்து விட்டதே கமல் தான் என அனைவருக்கும் தெரியும். இதை பல பேட்டிகளில் மனோபாலாவே கூறியிருக்கிறார்.
திருமணத்திற்கு முன் காதல்: இவர் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தாராம். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சினிமா என்பது அறவே பிடிக்காத விஷயம். அதனால் அந்த பெண்ணின் வீட்டார் மனோபாலாவுக்கு பெண் கொடுக்க மறுத்து இருக்கிறனர். அந்த நேரத்தில் மனோபாலா பிள்ளை நிலா என்ற படத்தை இயக்கி அந்த படமும் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியுடன் தான் காதலித்த பெண்ணை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பெண் நிச்சயதார்த்த பத்திரிக்கையை மனோபாலாவிடம் நீட்டி இருக்கிறார். மனோபாலாவுக்கு ஒரே அதிர்ச்சி.
இருந்தாலும் அந்த பெண்ணிடம் உன் திருமணம் நடப்பதற்கு முன் என்னுடைய திருமணத்தை நாம் நடத்திக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு நேரடியாக தன் பெற்றோரிடம் வந்து நீங்கள் எந்த பெண்ணை காட்டினாலும் நான் திருமணம் செய்து கொள்கிறேன். உடனே எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கூறினாராம். அதற்கு ஏற்ப அவருடைய பெற்றோரும் மன்னார்குடியில் ஒரு பெண்ணை பார்க்க சென்றிருக்கின்றனர். அந்த பெண்ணை பார்த்த மனோபாலாவுக்கு மிகவும் பிடித்து விட அதிலிருந்து அவருடைய திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்திருக்கிறது.
ஏன் மதுரையில் கல்யாணம்?: தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட மனோபாலா மதுரையில் திருமணம் வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஏனெனில் அவர் காதலித்த பெண்ணின் சொந்த ஊரும் மதுரை தான். அதனால் அந்தப் பெண்ணுக்கு தெரியும்படி தன்னுடைய திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைத்து தன்னுடைய திருமணத்தை மதுரையில் வைக்க சொல்லி இருக்கிறார். ஆனால் இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில் பெண் பார்த்ததிலிருந்து அதுவரை அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட மனோபாலா பேசவில்லையாம். பேச போகும் போதெல்லாம் ஏதாவது தடங்கள் வந்து கொண்டே இருந்ததாம்.
கடைசியில் ஒரு கோயிலில் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்க ஒரு திரைப்பட விநியோகஸ்தரிடம் தாலியும் மாலையும் வாங்கி வரும்படி ஏற்கனவே சொல்லி இருந்தாராம் மனோபாலா. ஆனால் தாலி கட்ட 3 நிமிடத்திற்கு முன்பு வரை அந்த விநியோகஸ்தர் வரவே இல்லையாம். இதனால் அந்த இடமே பரபரப்பாக இருந்திருக்கிறது. திடீரென ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாராம் அந்த விநியோகஸ்தர். கையில் தாலி மாலையுடன் வந்திருக்கிறார். என்ன பிரச்சனை என கேட்டதற்கு எனது வயிறு பிரச்சனை என சொல்லி தாலியையும் மாலையையும் கொடுத்தாராம்.
மாமனாருக்கு நெஞ்சுவலி: அதற்கு மனோபாலா உனக்கு வயிறு பிரச்சனை, எனக்கு வாழ்க்கையே பிரச்சனை என தாலி மாலையை வாங்கிக் கொண்டு அந்த பெண்ணின் கழுத்தில் கட்டினாராம். திருமணம் முடிந்த கையோடு மனோபாலாவின் அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். இதை பார்த்து மனோபாலாவின் மனைவிக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் தான் வந்த நேரம் தான் மாமனாருக்கு இப்படி ஆகிவிட்டது என நினைத்து அவருக்கும் திடீரென படபடப்பு வந்து மயங்கி விட்டாராம். உடனே அவரையும் ஆசுவாசப்படுத்தி அன்று இரவு மன்னார்குடியில் வரவேற்பு வைத்திருந்தார்களாம். அந்த வரவேற்பிற்கு அனைவரும் சென்று விட்டனர்.
அப்பொழுது வரை கூட மனோபாலா அவருடைய மனைவியிடம் பேசவே இல்லையாம். கடைசியில் வரவேற்பு எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது தான் மனோபாலாவின் அக்கா உன் மனைவியிடம் உன்னுடைய தொழில் பற்றி தெளிவாக பேசிவிடு என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தான் அன்று இரவு அவருடைய மனைவியிடம் ‘நான் ஒரு சினிமாக்காரன். சில நேரங்களில் குடிப்பது வழக்கம். சில சமயங்களில் வீட்டிற்கு லேட்டாக வருவேன்’ என்றெல்லாம் கூறி அப்பொழுதுதான் அவருடைய பேச்சையே ஆரம்பித்து இருக்கிறார். அதற்கு அவருடைய மனைவி ஹிந்தியில் பேச்சை ஆரம்பித்தாராம்.
இதைக் கேட்டது மனோபாலாவுக்கு அதிர்ச்சி. நீ எங்கிருந்து மா வர என கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் ஹிந்தியில் என்னுடைய பூர்வீகம் மன்னார்குடி தான். ஆனால் செட்டில் ஆனது பஞ்சாப் என சொல்ல அவருக்கு தமிழே தெரியாத விஷயம் அப்பொழுதுதான் மனோபாலாவுக்கே தெரியுமாம். அவ்வளவு தான் நம்முடைய வாழ்க்கை என நினைத்துக் கொண்ட மனோபாலா இப்படித்தான் தன்னுடைய குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய மகன் பிறந்து இரண்டு வருடங்கள் அவருடைய மனைவியும் மகனும் ஹிந்தியிலேயே தான் பேசினார்களாம். உடனே மனோபாலா உள்ளே வரும்போது ஏதோ சேட்டு கடையில் நுழைகிற மாதிரி இருக்கு. கொஞ்சம் தமிழையும் கற்றுக்கொள்ளுமா என கூற அதன் பிறகு தான் தமிழை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம் மனோபாலாவின் மனைவி.