பிரிந்து இருந்த எம்ஜிஆர், கண்ணதாசன்... சேர்த்து வைத்த சூப்பர்ஹிட் பாடல் அதுதான்..!

கண்ணதாசனும், எம்ஜிஆரும் இருவேறு துருவங்களாகப் பிரிந்து இருந்த காலம் அது. அரசியல் காரணங்களுக்காக எம்ஜிஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சிப்பார். அதனால தன்னோட படங்களுக்குக் கண்ணதாசனை பாடல் எழுத எம்ஜிஆர் கூப்பிடுறது இல்ல. அந்த நேரத்தில் அவர் வாலியைப் பயன்படுத்தினார். அதுமட்டும் அல்லாமல் ஏராளமான பாடலாசிரியர்களையும் உருவாக்கி வைத்து இருந்தார். இந்த நேரத்துல எம்ஜிஆரையும், கண்ணதாசனையும் இணைத்தது ஒரு பாடல். அந்த சுவாரசியத்தைப் பார்ப்போமா...
சிவாஜியின் பல படங்களை இயக்கியவர் பிஆர்.பந்துலு. அப்போது சில படங்கள் சரியாகப் போகவில்லை. அதனால் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அந்த நேரத்துல என்ன செய்யலாம்னு பார்த்தபோது அவரது நண்பர்கள் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் பண்ணுங்க. எல்லா கடன் பிரச்சனையும் தீர்ந்துடும்னு சொல்லிருக்காங்க.
அதனால எம்ஜிஆருக்கு என்ன கதை பண்ணலாம்னு யோசிச்சிருக்காரு. அப்போ அவரது கதை இலாகாவில் கே.ஜே.மகாதேவன் சாகசம் நிறைந்த ஒரு கதையை சொல்ல அது அவருக்குப் பிடித்து விட்டது. உடனே பிஆர்.பந்துலு எம்ஜிஆரிடம் சொல்ல அவருக்கும் பிடித்து விட்டது. உடனே வாலியை அழைத்து நாம அடுத்த படம் பிஆர்.பந்துலுவோடு சேர்ந்து பண்ணலாம். கதை ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லிருக்காரு எம்ஜிஆர்.
அதுதான் ஆயித்தில் ஒருவன் படம். இந்தப் படத்தில் அடிமைகளை மீட்டுக் கொண்டு எம்ஜிஆர் கப்பலில் தப்பித்துச் செல்கிறார். மன்னரின் மகள் எம்ஜிஆரைக் காதலிக்கிறார். சுதந்திர உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பாடல் வேண்டும். இந்த சூழலில் அப்படி ஒரு பாட்டு தேவை. எம்எஸ்.வி. இசை அமைக்கிறார்.
இந்த சூழலுக்கு ஒரு பாட்டைப் போட்டுக் கொடுத்தால் வாலி எழுதுற பாட்டு இயக்குனருக்கும், எம்எஸ்விக்கும் பிடிக்கல. எம்ஜிஆர் வளர்த்த கவிஞர்கள் எழுதுவதும் செட்டாகல. கடைசியில எம்எஸ்வி., பிஆர்.பந்துலுவிடம் கண்ணதாசன்தான் இந்தப் பாடலுக்கு சரியா எழுதுவாரு. அவரைப் பாருங்கன்னு சொல்றாரு. நானே இப்ப தான் சிவாஜிகிட்ட இருந்து வந்துருக்கேன். என்னால போய் கொடுக்க முடியாது. நீங்க போய் பாருங்கன்னு சொல்றாரு. உடனே எம்எஸ்வி., கண்ணதாசனிடம் பேசி இருக்கிறார்.
உடனே எம்ஜிஆரிடம் எம்எஸ்வி. இதற்கு அனுமதி கேட்க உங்களுக்குப் பிடிச்சிருந்தா பாட்டு வாங்குங்கன்னு சொல்லி அனுமதி வழங்கி விட்டார். கண்ணதாசனும் முதலில் இதுகுறித்து ஆச்சரியமாகக் கேட்டு பின்னர் சம்மதித்துள்ளார். அதன்பிறகு உடனே அவசரம். போன்லயே சொல்லுங்கன்னு எம்எஸ்வி. கேட்டுள்ளார்.
அப்போது கண்ணதாசனின் அறைக்குள் ஒரு பறவை பறந்து செல்ல உடனே அவருக்கு ஒரு ஐடியா வந்துள்ளது. அதுதான் முதல் வரி. அடுத்ததாக எம்ஜிஆர் எப்படி ஆடுவார் என யோசிக்க ஒரு கையை மேலே நீட்டுவார். ஒரு கையை கீழே நீட்டுவார். அப்படின்னா என்னன்னு யோசிக்க 2வது வரி ஓகே ஆகிடுச்சு. அதுதான் 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்...' என்ற சூப்பர்ஹிட் பாடல். இது படக்குழு அனைவருக்குமே பிடித்துப் போனது. இந்தப் பாடலுக்குப் பின் பிரிந்த நட்பு ஒன்றிணைந்தது.