எம்.ஜி.ஆரை சீண்டிய இயக்குனர்!.. காரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!. ஒரு பிளாஷ்பேக்!..

எம்.ஜி.ஆருக்கு மிகவும் தீவிரமான ரசிகர்கள் இருந்தார்கள். அவரை வாழும் கடவுளாகவே பார்த்தார்கள். அதனால்தான் எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆர் சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜவாழ்விலும் இருப்பார் என்றே அவர்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடியே வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்.
கொடுத்து சிவந்த கரங்கள் என சொல்வது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருந்தும். தன்னால் முடிந்தவரை பல ஏழை மக்களுக்கு உதவினார். குறிப்பாக பல ஏழைகளின் வாழ்வாதாரம் உயர எம்.ஜி.ஆர் காரணமாக இருந்திருக்கிறார். அதனால்தான் அவரை மக்கள் வள்ளல் என்றே அழைத்தனர். எம்.ஜி.ஆருக்கு ஒன்றென்றால் அவரின் ரசிகர்கள் பொங்கிவிடுவார்கள்.
எங்க வீட்டு பிள்ளை படத்தின் துவக்கத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் சாட்டையால் அடிப்பது போல சில காட்சிகள் வரும். இதைப்பார்த்து கொதிப்படைந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தியேட்டரிலிருந்து வெளியேறி நேராக நம்பியார் வீட்டுக்கு போய்விட்டனர். ‘நீ எப்படி எங்கள் தலைவரை சாட்டையால் அடிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வா’ என ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின் நம்பியார் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து இதை சொல்ல எம்.ஜி.ஆர் அங்கு சென்று தனது ரசிகர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
அதேபோல், ஒருமுறை நம்பியாரின் காரை மறித்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ‘எங்க தலைவனை நீ எப்படி அடிக்கலாம்?’ என சண்டை போட்ட சம்பமும் நடந்தது. அதாவது, திரையில் பார்க்கும் சண்டை காட்சிகளை உண்மை என்றே அவர்கள் நம்பினார்கள். எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் சாட்டையால் அடி வாங்கியதை பார்த்து சில நரிக்குறவர்கள் தங்களை சாட்டையால் அடித்துகொண்டனர். இப்படி நிறைய உதாரணம் இருக்கிறது.
60களில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி பிரபலமாக இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்து வெளியான பணமா பாசமா என்கிற படம் ஆசியாவிலேயே 2வது பெரிய தியேட்டரான மதுரை தங்கம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வசூலை அள்ளியது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘இந்த படம் வசூல் சக்ரவர்த்திகளின் படங்களின் வசூலை முறியடித்துவிட்டது’ என எம்.ஜி.ஆரை மறைமுகாக தாக்கி பேசினார்.
பேசிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இதுபற்றி தங்கம் தியேட்டர் அதிபரிடம் முறையிட அவரோ ’மதுரையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதிகம். அவரின் பட போஸ்டரை பார்த்தாலே கையில் இருக்கும் பீடியை மறைத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு மரியாதை கொடுக்கும் ரசிகர்கள் எம்.,ஜி.ஆரை நீங்கள் தாக்கிப்பேசினால் சும்மா விடுவீர்களா?.. பத்திரமாக வீட்டுக்கு போங்க’ என என சொல்லி அனுப்பி வைத்தாராம்.