யாருக்கிட்ட வந்து விளையாடுறீங்க...? இந்தப் பாட்டை யாரு எழுதினது? கோபத்தில் பொங்கிய எம்ஜிஆர்
கவியரசர் கண்ணதாசனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். அந்த நேரத்தில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் பொன்னெழில் பூத்தது புதுவானில் என்ற பாடலை கவியரசர்தான் எழுதினார்னு நிறைய பேர் சொல்வாங்க.
இதுகுறித்து பிரபல இயக்குனர் பஞ்சு அருணாசலத்தின் மகனும் நடிகருமான சுப்பு பஞ்சு என்ன சொல்றாருன்னு பாருங்க.
அப்போ எம்ஜிஆர் சாருக்கும், கவிஞர் அய்யா கண்ணதாசனுக்கும் கொஞ்சம் மனவருத்தம். அப்போது எம்ஜிஆர் சாருக்கு கவிஞர் அய்யா பாட்டு எழுதல. அவரும் வேணாம்னுட்டாரு. இவரும் எழுத மாட்டேன்னுட்டாரு. அப்படி ஒரு காலகட்டம்.
அப்போ வந்து அப்பாவை பாட்டு எழுதுறதுக்குக் கூப்பிடுறாங்க. அப்பா எழுதுனதுதான் பொன்னெழில் பூத்தது புதுவானில் பாடல். இதை எம்ஜிஆருக்கிட்ட கொண்டு போய் கொடுக்குறாங்க. அவரு பார்த்துட்டு 'என்ன விளையாடுறீங்களா? கவிஞர் அய்யாகிட்ட எழுதி வாங்கிட்டு வந்துட்டு'ன்னு கோபப்படுகிறார்.
'யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க? நான் நம்பவே மாட்டேன். இந்த வரிகளை கவிஞரைத் தவிர வேற யாராலும் எழுத முடியாது'ன்னாரு. அந்த அளவுக்கு அந்தப் பாட்டு இருந்துருக்கு.
அப்போ எம்எஸ்வி. சொல்றாரு. 'இல்ல. இல்ல. என் முன்னாடி தான் எழுதுனான்'னு. அப்போ எம்ஜிஆர் 'என் முன்னாடி இன்னொரு பாட்டை எழுதச் சொல்லுய்யா...'ன்னாரு. அதே படத்துல இன்னொரு பாட்டு. அப்பா எழுதுனாரு. அப்புறம்தான் எம்ஜிஆர் நம்பி 'ஓகே' சொன்னார்.
அப்புறம் 'அவரை பாட்டு எழுத வரச் சொல்லுங்க... கவிஞரைக் கூப்பிட்டு வாங்க'ன்னு எம்ஜிஆர் சொன்னாரு. அப்போ அப்பா வந்து 'எழுத வரச் சொன்னாருன்னா வந்துடுறேன். கவிஞரக் கூப்பிடுங்கன்னா வர மாட்டேன்' ன்னாரு. அப்புறம் எம்ஜிஆருக்கும், அவருக்கும் அந்தளவுக்கு ஒரு ரிலேஷன்ஷிப்.
'அவன் தைரியமா எங்கிட்டேயே சொல்லிட்டான்யா. நான் கூப்பிட்டே வர மாட்டேன்னுட்டான்யா. அவன் ரொம்ப நல்ல பையன். கவிஞர்தான் முக்கியம்னு போயிட்டாம்ல. நல்ல பையன்'னு எம்ஜிஆர் அப்பாவைப் பற்றி சொல்லி இருக்காரு. அந்த வகையில் அப்பா என்னைக்குமே கவிஞர் அய்யாவை விட்டுக் கொடுக்க மாட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1965ல் கே.சங்கர் இயக்கத்தில் கலங்கரை விளக்கம் படம் வெளியானது. எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த படம். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் எம்எஸ்.வி. இந்தப் படத்தில் தான் பஞ்சு அருணாசலம் எழுதிய பொன்னெழில் பூத்தது புதுவானில் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.