தமிழில் ஃபிளாப் ஆகி தெலுங்கில் ஹிட் அடித்த 3 தமிழ் படங்கள்!.. முதலிடத்தில் குபேரா!...

80களில் நிறைய தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியானது. குறிப்பாக சிரஞ்சீவியின் படங்களுக்கு இங்கே நல்ல வரவேற்பை இருந்தது. அதேபோல், விஜயசாந்தியின் படங்களும் இங்கே சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், வெங்கடேஷ், டாக்டர் ராஜசேகர், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெளியாகி வந்தது.
கமலின் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற படங்கள் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். ரஜினியும் நிறைய தமிழ் ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் தமிழில் பாலச்சந்தர் எடுத்த படங்களை தெலுங்கில் எடுத்து வந்தார்கள். எனவே, தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உண்டு.

அதேபோல், தமிழ் சினிமா இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, வெங்கட்பிரபு, ஷங்கர் போன்றவர்கள் கூட ஆந்திரா சென்று நேரடி தமிழ் படங்களை எடுத்தார்கள். இப்போது அது மாறி தெலுங்கு சினிமா இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படமெடுக்க துவங்கிவிட்டனர். அவை எல்லாமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிறது.
சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் விஜய் ஆண்டனி, பிரதீப் ரங்கநாதன் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள். எனவே, இவர்களின் எல்லா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் தமிழில் ஓடாமல் தெலுங்கில் ஹிட் அடித்த 3 திரைப்படங்களை பார்ப்போம்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழில் வரவேற்பை பெறவில்லை. ஆனால், தெலுங்கில் இப்படம் நல்ல வசூலை பெற்றதாக கார்த்தியே ஒரு விழாவில் பேசியிருக்கிறார்.

96 பட இயக்குனர் ராம் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த படம் மெய்யழகன். ஒரு சிறப்பான ஃபீல் குட் படமாக மெய்யழகன் வெளியானது. யாரென்று ஞாபகம் இல்லாமல் உறவினர் ஒருவருடன் ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலையில் அவனின் அன்பை தாங்க முடியாமல் ஒருவன் தவிக்கும் கதை இது. சூர்யா குடும்பத்தின் மீது கொண்ட வன்மத்தால் தமிழில் இப்படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்றது.
தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியானது குபேரா படம். இப்படத்தின் புரமோஷன் விழாவில் தனுஷ் ஓவராக பேசியது ட்ரோலில் சிக்கியது. இதனாலேயே இப்படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, தமிழில் இப்படம் பெரிய வசூலை பெறவில்லை. ஆனால், ஆந்திராவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.