இளையராஜாவை இசையமைக்கவிடாமல் தடுத்த மிஷ்கின்!.. அதான் முட்டிக்கிச்சா!...
Ilayaraja: சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படத்திலேயே இவர் வித்தியாசமான இயக்குனர் என்பதை உணர்த்தினார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடியது.
அதன்பின் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஜீவாவை வைத்து முகமூடி, விஷாலை வைத்து துப்பறிவாளன், புதிய முகத்தை போட்டு பிசாசு, உதயநிதியை வைத்து சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை இயக்கி அவரே அதில் நடித்தார். அவரின் நடிப்பு பாராட்டை பெற்றாலும் படம் ஓடவில்லை.
ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. அதன்பின், விஜய் சேதுபதியை வைத்து 'ட்ரெயன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விஜய் சேதுபதி கால்ஷீட் இல்லாததால் படம் பாதியிலேயே நிற்கிறது.
கடந்த சில வருடங்களாகவே மிஷ்கின் திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். மாவீரன் படத்தில் வில்லனாகவே நடித்திருருந்தார். லோகேஷ் இயக்கிய லியோ படத்திலும் நடித்திருந்தார். இப்போது எல்லோரும் மிஷ்கினை தங்களின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டனர்.
மிஷ்கின் இளையராஜாவின் தீவிர ரசிகர். ஆனாலும் அவருடன் சண்டை போட்டிருக்கிறார். ‘இனிமே என்ன பார்க்க வராத’ என இளையராஜா திட்டி விரட்டிய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். சைக்கோ படத்தில் கூட ‘உன்ன நினைச்சி நினைச்சி’ பாடலை சித் ஸ்ரீராம் பாட வேண்டாம் என இளையராஜா சொல்ல, இல்லை ‘அவர்தான் பாட வேண்டும்’ என மிஷ்கின் அடம்பிடிக்க இருவருக்கும் முட்டிக்கொண்டது. கடைசியில் மிஷ்கின் ஆசைப்படியே அந்த பாடலை சித் ஸ்ரீராமே பாடியிருந்தார்.
அதேபோல், மிஷ்கின் இயக்கி நடித்த நந்தலாலா படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். ஆனால், அது ஒரு ஜப்பான் மொழி படத்தின் காப்பி என்பதை மிஷ்கின் தன்னிடம் சொல்லவே இல்லை என்கிற கோபமும் இளையைராஜாவுக்கு இருந்தது. அந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது முதல் காட்சியை பாராட்டிவிட்டு இசையமைக்க துவங்கியிருக்கிறார் ராஜா.
ஆனால், அவரை மிஷ்கின் தடுத்து ‘மியூசிக் வேண்டாம்’ என சொல்ல ராஜாவோ ‘என்னய்யா சொல்ற.. டைட்டில் கார்டுக்கு மியூசிக் போடாம நான் இருந்ததே இல்ல’ என சொல்லியிருக்கிறார். ‘மியூசிக் இல்லாம டைட்டில் வந்த முதல் படமா இது இருக்கட்டும்’ என சொல்லி அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். அவர் ஆசைப்பட்டது போலவே பின்னணி இசை இல்லாமல்தான் நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டு படத்தில் வரும்.