வில்லன் இமேஜை உடைத்த படம்.. கேரக்டரை சொன்னதும் ஷாக்கான ரகுவரன்
ஒரு குறிப்பிட்ட காலம் வரை சினிமாவில் வில்லன் என்பது கத்தியை காட்டி மிரட்டுவது, முகமூடி போட்டு பயமுறுத்துவது இப்படித்தான் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நம்பியார் வரை இப்படித்தான் இருந்தது. அதன் பிறகு 80களில் கொஞ்சம் மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில் 80க்கு பிறகு ரகுவரன் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்தார். ஹீரோவாக அவர் அறிமுகமானாலும் வில்லனாகத்தான் சினிமா அவரை பார்க்க ஆசைப்பட்டது.
எத்தனையோ படங்களில் வில்லன் வேடமேற்று நடித்த ரகுவரனை ஒரு சிறந்த நடிகராக்கியும் காட்டிய திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்தப் படத்திற்கு முன்புவரை ரகுவரன் என்றால் வில்லன் என்ற ஒரு இமேஜ்தான் இருந்தது. அதன் பிறகு இயக்குனர் சரவணன் ரகுவரனிடம் விசு டைரக்ஷனில் ஒரு படம் இருக்கிறது. உன்னைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என விசு ஆசைப்படுகிறார். அவரை போய் பாரு என சொன்னாராம்.
சரவணன் சொன்னதின் பேரில் ரகுவரனும் விசுவை போய் பார்க்க அந்த படத்தின் கேரக்டரை பற்றி விசு சொல்லியிருக்கிறார். ஒரு குடும்பத்தின் தலைவன் அதுவும் சரியான கஞ்சன் என்றதுமே ரகுவரனுக்கு ஷாக். வில்லன் இமேஜை உடைத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் அமைந்தது என ரகுவரன் ஒரு பேட்டியில் கூறினார். இருந்தாலும் விசு சார் ஸ்கூல், சவாலான கேரக்டர் என முதலில் பயம் இருந்தது என்றும் ரகுவரன் கூறினார்.
ஆனால் படத்தில் ரகுவரன் கேரக்டரைத்தான் அதிகமாக பேசினார்கள். வில்லனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நடிக்க முடியும் என பல படங்களில் ரகுவரன் நிரூபித்திருக்கிறார். அதில் முக்கியமாக சொல்லவேண்டுமென்றால் தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம். தனுஷுக்கு அப்பாவாக அந்தப் படத்தில் நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார்.
அதை போல் முகவரி படத்தில் அஜித்துக்கு அண்ணனாகவும் கண்ணுக்குள் நிலவு படத்தில் ஷாலினிக்கு அப்பாவாகவும் திருமலை படத்தில் விஜயின் பக்கத்து வீட்டு நண்பர் கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார் ரகுவரன். குடிக்கு அடிமையானதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார் ரகுவரன். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.