இவ்வளவு சம்பளம் வேண்டாம்!.. குறைச்சி கொடுங்க!.. தயாரிப்பாளரிடம் சொன்ன ரஜினி!....

Rajinikanth: பொதுவாக தனது படங்கள் என்ன வசூலை பெறுகிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ற சம்பளம் வாங்கும் நடிகர்கள் மிகவும் குறைவு. 2 கோடி வசூலை பெறாத படங்களில் நடிக்கும் நடிகர்கள் 5 கோடி சம்பளம் கேட்பார்கள். அவர்களுக்கு தயாரிப்பாளர்களை பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இருக்காது. பணத்தை வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும், காஸ்ட்லி கார் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், ஜாலியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே பெரும்பாலான நடிகர்களின் மனநிலையாக இருக்கும்.
ஆனால், அப்படி இருக்கும் நடிகர்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுவார்கள். அதேநேரம், தன்னுடைய படங்களின் வசூலை பொறுத்து சம்பளம் வாங்குபவர்கள் திரைத்துறையில் நீடித்து நிற்பார்கள். நடிகர் ரஜினியெல்லாம் இப்போது வரை தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க இதுவும் முக்கிய காரணம். அப்போது என்ன சூழ்நிலையோ அதற்கு ஏற்ற சம்பளத்தை அவர் வாங்குவார்.
எனக்கு இவ்வளவு கொடுத்தே ஆக வேண்டும் என அவர் ஒருமுறை கூட எந்த தயாரிப்பாளரிடமும் கறாராக சொன்னது இல்லை. அதனால்தான் அவரை தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கிறது. தர்பார் படத்திற்கு 105 கோடி சம்பளம் வாங்கினார் ரஜினி. அந்த படம் சரியாக போகவில்லை. அடுத்து சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்த அண்ணாத்த படத்திற்கு 110 கோடி வாங்கினார். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே, மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்தார். அப்படி உருவான ஜெயிலர் படத்தில் வெறும் 80 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டார் ரஜினி. அதாவது சம்பளத்தில் 30 கோடியை குறைத்துக்கொண்டார். படம் சூப்பர் ஹிட் அடித்து 650 கோடி வசூல் செய்தால் அந்த 30 கோடியை கலாநிதி மாறனே ரஜினிக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் கொடுப்பதாக சொன்ன சம்பளத்தில் இருந்து ரஜினியே குறைத்து வாங்கிய சம்பவம் பற்றி பார்ப்போம். ரஜினியை அறிமுகம் செய்த பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. அந்த படத்திற்கு ரஜினிக்கு 14 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. சில நாட்களில் ரஜினியை வைத்து படமெடுக்க வந்த ஏவிஎம் நிறுவனம் ரஜினியிடம் ‘உங்களின் இப்போதைய மார்கெட்டுக்கு 12.5 லட்சம் மட்டுமே கொடுக்க முடியும். அதற்கு மேல் கேட்காதீர்கள்’என சொல்லியது.
அப்போதுதான் ரஜினிக்கு புரிந்தது. உடனே கவிதாலயா நிறுவனத்தை தொடர்பு கொண்ட ரஜினி ‘எனக்கு பேசிய சம்பளத்தில் ஒன்றரை லட்சத்தை குறைத்துக்கொள்ளுங்கள். பனிரண்டரை லட்சம்தான் என் மார்கெட் மதிப்பு’ என சொல்லியிருக்கிறார். அனேகமாக சினிமாவில் இப்படி சொன்ன ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருப்பார் என தைரியமாக சொல்லலாம். இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.