போயஸ் கார்டனில் மாறுவேடத்தில் இருந்த ரஜினி.. லேட்டா வந்ததால இப்படி ஒரு தரிசனமா?
நடிகர் ரஜினி: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடம் ஆக சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடி பெயர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். வில்லனாக துணை நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி ஹீரோவாக பைரவி திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதுவரை ஹீரோ என்றால் வெளிர் நிறத்துடன் அழகான முகத்தோற்றம் என்ற ஒரு போர்வை இருந்தது. அதை அப்படியே தகர்த்தெறிந்தவர் ரஜினி. பாலச்சந்தர் எஸ் பி முத்துராமன் பாரதிராஜா என ஒப்பற்ற இயக்குனர்களாக இருந்தவர்களுடன் பணியாற்றி தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினி.
மாஸ் குறையாத ரஜினி: தற்போது 74 வயதை நெருங்கிய நிலையிலும் இன்னும் அதே மாஸ், ஸ்டைல் குறைந்தபாடில்லை. எத்தனையோ இளம் தலைமுறை நடிகர்கள் வந்தாலும் ரஜினியின் படங்களுக்கு தான் ஓப்பனிங் இருந்து வருகிறது. இவருடன் யாருமே போட்டி போட முடியவில்லை. நம்பர் ஒன் இடத்திலேயே இருந்து வருகிறார். புதுப்புது இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என இவர்கள்தான் மாறி வருகின்றார்கள் தவிர ரஜினி ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அதே ரஜினியாக தான் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
டைம் மேனேஜ்மெண்ட்: தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் டைம் மேனேஜ்மென்ட். இதை பின்பற்றுவதில் சிவாஜிக்கு நிகர் யாருமில்லை என்று சொல்வார்கள். அந்த வகையில் சிவாஜிக்கு அடுத்தபடியாக நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துபவர் ரஜினி தான் என பிரபல மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் விளக்கி இருக்கிறார். ஏதோ ஒரு விழாவுக்காக பத்திரிக்கை வைக்க வேண்டும் என வெங்கடேஷ் கேட்க அதற்கு ரஜினி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.
மாறுவேடத்தில் ரஜினி: நாளை காலை 7:00 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் என சொன்னாராம் ரஜினி. வெங்கடேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் பத்திரிகையை எடுத்துக்கொண்டு புறப்பட இடையே டிராபிக்கில் சிக்கிக் சிக்கிக்கொண்டார்கள். அதனால் அவருடைய போயஸ் கார்டன் வீட்டுக்கு செல்ல 7. 20 மணி ஆகிவிட்டதாம். அப்போது ரஜினியின் வீட்டில் இருந்து வெளியே ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம். இவர்களை பார்த்ததும் எங்கு போகிறீர்கள் என விசாரித்திருக்கிறார். உள்ளே தலைவரை பார்க்கத்தான் செல்கிறோம் எனக் கூற எத்தனை மணிக்கு வர சொன்னார் என கேட்டிருக்கிறார்.
அதற்கு இவர்கள் 7 மணி என்று சொன்னதும் இப்பொழுது 7:20 ஆகிவிட்டதே. தலைவர் வெளியே போய் விடுவாரே. சரி போங்க என சொல்லிவிட்டு அவர் சைக்கிளில் சென்று விட்டாராம் .அதன் பிறகு உள்ளே இருந்து உதவியாளர் ஒருவர் வெளியே வர அவரும் இதே கேள்வியை கேட்டு இப்போதுதான் தலைவர் போகிறார் என கூறியிருக்கிறார். அதற்கு வெங்கடேஷ் யாரும் வெளியே போகவில்லையே என சொல்ல அதோ சைக்கிளில் போகிறாரே அவர்தான் தலைவர் என சொன்னாராம்.
அந்த நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு போயஸ் கார்டனில் இருந்து பீச் வழியாக காந்தி சிலை வரை சென்று திரும்பி சைக்கிளில் வருவாராம் ரஜினி. இதைப் பற்றி வெங்கடேஷ் கூறும்போது ஏகப்பட்ட படங்கள் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். ஆனால் அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர் ஒரு சித்தர் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் வெங்கடேஷ்.அதுமட்டுமில்லாமல் அவருடைய கண்ணை பார்த்து ஒரு இரண்டு நிமிடம் இப்போதுள்ள ஆர்ட்டிஸ்டை பேச சொல்லுங்கள். முடியாது. வாழும் சித்தர் ரஜினி என கூறினார் வெங்கடேஷ். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் சரி அடையாளம் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் குரலையும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா என கேள்வி கேட்டிருக்கின்றனர்.