பாடகர் ஜெயச்சந்திரனைப் பாடாய்படுத்திய இளையராஜா பாடல்...! அட அது சூப்பர்ஹிட்டாச்சே..!

அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் ராசாத்தி உன்னை, காத்திருந்து காத்திருந்து, கொடியிலே மல்லிகைப்பூ என பல சூப்பர்ஹிட் மெலடி பாடல்களைப் பாடியிருந்தார்.
மெலடி டிராக்: இளையராஜாவின் குருநாதர் மெல்லிசை விஸ்வநாதனுக்கும், ராஜாவுக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா மெலடி டிராக்தான் என ஜெயச்சந்திரன் குறிப்பிட்டு இருந்தார். இளையராஜாவின் இசையில் நான் பாடிய கடினமான பாடல் என்னன்னா கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் மாஞ்சோலை கிளிதானோ என்ற பாடல்தான்.
ரொம்ப ஸ்ட்ரிக்ட்: ராஜாவைப் பொருத்தவரைக்கும் அவர் எப்படி சொல்லிக் கொடுக்கிறாரோ அப்படியே பாடணும். அதுல கொஞ்சம்கூட பிசிறு இருந்தாலும் முதல்லே இருந்து பாடச் சொல்லி விடுவார். அவ்ளோ ஸ்ட்ரிக்ட்.
மாஞ்சோலை கிளிதானோ என்ற பாடலில் நெளிவு சுழிவு அதிகம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டுப் பாடினேன் என்கிறார் ஜெயச்சந்திரன். இளையராஜாவுடன் தான் பணியாற்றிய அனுபவங்களை ஒரு பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்தபோது ஜெயச்சந்திரன் இப்படி தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
கிழக்கே போகும் ரயில்: 1978ல் பதினாறு வயதினிலே படத்தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த படம் கிழக்கே போகும் ரயில். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. சுதாகர், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ராதிகா இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனார். முதலில் பல எதிர்ப்புகள் வந்ததாம்.
ஆனால் பாரதிராஜா தான் உறுதியாக தன் பட நாயகி ராதிகா என்றும் அதில் மாற்றம் இல்லை என்றும் இருந்தாராம். முதல் படத்திலேயே நடிப்பில் அழுத்தமான முத்திரை பதித்து விட்டார் ராதிகா என்றே சொல்ல வேண்டும். ஆர்.செல்வராஜ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது. வணிகரீதியாகவும் நல்ல வசூலைப் பெற்றுத் தந்தது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா. நாலே பாடல்கள்தான் என்றாலும் எல்லாமே அற்புதம். கோவில் மணியோசை, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, மலர்களே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் அப்போது வானொலிகளில் தவறாமல் தினமும் ஒலிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.